சிலருக்கு
முல்லைப்பூ வரிசையாய்!
சிலருக்கு
கோர்த்துவைத்த
முத்தின் வரிசையாய்!
சிலருக்கு
வெள்ளரிப்பழத்தின்
சிறுசிறு விதைகளாய்!
சிலருக்கு
பச்சரிசிப் போல
குட்டிகுட்டியாய்!
சிலருக்கு
முற்றிய பூண்டு
போல பெரியதாய்!
சிலருக்கு வாய்க்குள்ளேயே
படிதாண்டா பத்தினிகளாய்!
சிலருக்கு
வாய்விட்டு வெளியே
படிதாண்டிய பத்தினிகளாய்!
சிலருக்கு
அழகிய வரிசையாய்!
சிலருக்கு
கோணலும்மோணலுமாய்!
சிலருக்கு
கொற்கையிலே
மூச்சடக்கி ஆழ்கடலின் மடியில்
கண்ணுறங்கிய
சிப்பிகளிலிருந்து
உடைத்தெடுத்த
பாண்டிநாட்டு
முத்துகளிலிருந்து
தேர்ந்தெடுத்த
நல்முத்துகள் போல
பார்க்க அவ்வளவு
அழகாய் இருக்கும்!
எதுஎப்படியோ
அவரவர்க்கு
அவரவர் பற்கள்
முக்கியமாகும்!
பல்லின்றி சொல்லில்லை!
சொல்லின்றி மொழியில்லை!
ஆகவே
பல்லே மொழியாகும்!
புன்னகைக்குப் பேரழகு
மலரும் இதழிடை
தெரியும் பற்களே!
த.ஹேமாவதி
கோளூர்