Now Online

Tuesday, 30 April 2019

பொடிக்கவிதைகள்

*தஞ்சை பெரியகோவில்*

ஏர்முனையால்
வயல்களிலே
நெல்லோவியம்
தீட்டும் உழவர்கள்
நிறைந்த தஞ்சையில்
எழுதுகோல் முனையால்
பனையோலைகளிலே
சொல்லோவியம்தீட்டிய புலவர்கள் மத்தியிலே
உளிமுனையால்
பாறாங்கல்லிலே
கல்லோவியம் தீட்டியவன் இராஜராஜசோழன்!
காலங்கள் கடந்தாலும்
கம்பீரம் கடக்காமல்
இன்னும் நிமிர்ந்தே
நிற்கிறது!
தஞ்சை பெரியகோவில்


*படைப்பின் இரகசியம்

ஆண்சாதி ஒன்று
பெண்சாதி இரண்டு
இந்தவழக்கோடு
மூன்றாம் சாதியும்
ஒன்றுண்டு இது
ஆதியிலிருந்தே
வருகின்ற கணக்கு!
நாளமில்லா சுரப்பிகள் செய்கின்ற பிணக்கு!
ஆனணப் பெண்ணாக
பெண்ணை ஆணாக மாற்றுகின்ற சுணக்கு!
பதின்மத்தின் தொடக்கத்தில் தடுமாறும் ஹார்மோன்!அதனாலே மனம்
நிலைமாறும்
புதியகோணம்!
புரியாத பெற்றோர்கள்!
பரிகசிக்கும்
சுற்றங்கள்!
கேலிஆடும்
நட்புக்கூட்டங்கள்!
உடலாலும் பாதிப்பு!
மனதாலும் பாதிப்பு!
இவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே அன்றி தூற்றப்பட
வேண்டியவர்கள் அல்ல!
எதிரும் புதிரும்

என்னைக் காணும்போதெல்லாம்
வாய்மலர்ந்து ஒற்றைச் சொல்கூடப் பேசமாட்டாய்! என்னிடம் பேசும்போதுமட்டும்
மொழியிலே கருமியாய் இருக்கிறாயே என வருத்தப்பட்டாலும்
விழியாலே ஓராயிரம் சொல்பேசி அசத்திவிடுகிறாய்!
விழியால்
பேசும்போதில் அந்த ஏழு வள்ளலையும் மிஞ்சி விடுகிறாய்!

த.ஹே


வேண்டும் வேண்டும்

""""""""""""'  """""""""""""""'."""
வேண்டும் வேண்டும் அன்பே
நீ..என் அருகில் வேண்டும்.
நீங்காத. நிலையில் வேண்டும்..!
நினைவுகள் வருடும்போது
கவிதையாய்  நீவர வேண்டும்.

கனவு நான் கானும் போது..
காதலாய் அருகில் வேண்டும்
குணவதி நீதரும் அன்பு
குறை வின்றி வேண்டும்
வேண்டும்..!

உறவுகள் போனால் என்ன
உயிரே நீ உறவாக வேண்டும்
கண்ணிமை போல உன்னை
காத்திடும் வரம்தான் வேண்டும்.!

முழுமதி உன்னை கண்டு
முகமெல்லாம் மலர வேண்டு.
கொடி முல்லை எந்தன் மார்பில்
கொடி போல. படரவேண்டும்

அமுத மழை பொழிந்தால் கூட
அது எனக்கில்லை இன்பம்
உ.ண் அன்பு  மழை
பொழிந்தால் போதும்
அதில் முக்கி மூழ்க வேண்டும்
முடிய வேண்டும்


அப்துல் முத்தலிப்.


யுத்தம்

**

சரசரவென அம்புகளைத் தொடுத்து வீழ்த்தினான் அவளை அவன்!
வீழ்த்தப் பட்ட அவளோ
தன்னிரு வாள்களை வாகாய் வீசி சிறையகப் படுத்தினாள் அவனை!
யுத்தம் பெரும்யுத்தமாய்
மாறிய போதும்
இரத்தம் சிந்தவில்லை! காயங்கள் ஏற்படவில்லை!
இன்பமே விளைந்தது!காரணம் இருவருக்குமிடையே
நடந்தது காதல் யுத்தம்!
அம்பென்றது அவன் பார்வை! வாளென்பது அவளிரு கூர்விழிகள்!

த.ஹேமாவதி
கோளூர்


அன்றொருநாள்

**

(அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சாதனைக்குப் பின்னே இருக்கும் சவால்களுள் ஒன்று)

அன்றொரு நாள் காலையிலே பள்ளிக்குள் நுழைகின்றேன்,
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி வெளிச்சுவரில் காண்கின்றேன்,
சுவரொட்டியில் என் மாணவனின் சிரித்த முகம் பார்க்கின்றேன்.

பார்த்ததும் பதைத்தது என்னுடைய பிஞ்சு மனம்
என்னதான் நேர்ந்ததென்று அறியத் துடித்தது எந்தன் உளம்.
ஓடோடி வந்தான் ஒரு மாணவன் அந்தக்கணம்
தீவைத்து கொளுத்திக் கொண்டான் தெரிந்தது அக்காரணம்.

வில்லேந்திய இராமனின் பெயர்கொண்ட மாணவன்
குடிகாரத் தந்தையின் அவலத்தை சகித்தவன்
கவலையை உளத்திலே தெரியாமல் மறைத்தவன்
முகத்திலே சிரிப்பொன்றை எப்போதும் வைத்தவன்.

மாற்றுச் சான்றிதழ் தன்னில் கையெழுத்து போடவே
கையூட்டாய் புட்டி கேட்ட அப்பனின் பிள்ளை.
மது விற்கும் பணத்திற்காய் மனிதத்தை விற்றுவிட்ட
இரக்கமற்ற அரசுகளின் தேவையில்லாப் பிள்ளை.

அப்பன் எரிப்பதனால் புத்தகமே இல்லாமல் பலநேரம் எழுந்து நின்று கலங்கி நின்ற பிள்ளை.
ஆறுதலாய் நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு
அன்போடு எப்போதும் எனைப்பார்த்த பிள்ளை.

மேல்வகுப்பு சென்றபின்னும் காலையிலே எதிர்நின்று வணக்கம் சொல்லி வகுப்பு செல்லும் பழக்கமுடைய பிள்ளை.
மது தந்த கொடுமையை சகிக்கவே முடியாமல்
தீ நாக்கை வரவேற்று மடிந்து போன பிள்ளை.

நினைக்கின்ற பொழுதெல்லாம் கண்களிலே வந்து நின்று பலநேரம் மறைக்கிறது கண்ணீர் என் கண்ணை
அன்று ஒரு நாள் கடந்திருந்தால்
அன்று ஒரு நாள் கடந்திருந்தால்
வாழ்ந்திருப்பானோ அந்தப் பிள்ளை?

*சுலீ. அனில் குமார்*


மகாகவி பாரதி கவிதை

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியர சாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் தரும யோகத்தில
நிலைத்திடல் என்றிவை நல்குவாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தும்
குலவிடு தனிபரம் பொருளே!

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய்!!

மகாகவி பாரதி.

இனிய நற்காலை வணக்கம் !


சென்றது எங்கே?அன்றெல்லாம்
பள்ளியிலே ஏழாம்வகுப்பு வரை
பாவாடை சட்டை!
எட்டாம் வகுப்பு
வந்தாலோ
கண்கவரும் சீருடை
பாவாடை தாவணியாய் மாறும்!
சிறுமிகளுக்கோ
தாவணிக்கு மாறியதில் நாணமும் கர்வமும் ஓங்கும்!
இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டி தொடுத்த மலர்ச்சரம் பட்டையாய் வைத்து
தாவணி முந்தானையைப் பட்டையாய் இழுத்து
முன்பக்கம் சொருகி
நடக்கும் அழகே தனிஅழகு!
இப்போது இருக்கிறதா அந்த தனிஅழகு?
நம்உணர்வோடு கலந்தது மொழிமட்டுமல்ல!
உடையும் தான்!
தமிழர்களின்
புடவை உலகமே
வியக்கும் காவியமல்லவோ?
அதில் தாவணி என்பது கவிதையன்றோ?
மெல்லமெல்ல
தாவணியின் இடத்தை இன்று சுடிதாரும் துப்பட்டாவும் பிடித்துக்கொண்டது
யாராலே?எதனாலே?
மனம் குமைகிறது!
தாவணி அணிந்ததுமே சிறுமிகளிடையே வரும் வெட்கம் அழகு!
தான் பெரியவளாகிவிட்டோம் என்றநினைப்பினில் வரும் கர்வம் அழகு!
இனி பக்குவமாய்
பண்பாடாய் நடக்கவேண்டும் என்ற சிந்தனையால் முகத்தில் வெளிப்படும் பெருமிதம் அழகு!
இவ்வாறே கல்யாணவீடுகளில்
வண்ணவண்ண தாவணிகளில் ஆளான பெண்கள் உலாவருவது அழகு!
பெற்றோரும் மற்றோரும் சொல்லித்தரும் முன்னரே
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்னும் நால்வகைக் குணத்தோடு
சிறுமிகளுக்கு பண்பாட்டைச் சொல்லுவதில் முந்திக்கொள்கிறது
பாவாடை தாவணி!
ஆயிரம்தான் சொல்லுங்கள் இந்த சுடிதாரும் துப்பட்டாவும் நம்ம பாவாடை தாவணி போலாகுமா?

த.ஹேமாவதி
கோளூர்


நட்பில் பொய்மை

*

அன்பால் இணைந்து பண்பால் உயர்ந்து
நின்றால் நட்பில் உண்மை
அன்பைப் பழித்து பண்பை அழித்து
நிற்றல் நட்பில் பொய்மை.

ஆபத்து என்றால் ஆதரவாய் நின்று
காத்தல் நட்பில் உண்மை
ஆபத்து என்றதும் ஆறுகாத தூரம்
ஓடுவது நட்பில் பொய்மை.

தவறைக் கண்டு தவறை உணர்த்தி
திருத்துதல் நட்பில் உண்மை
தவறைச் செய்ய தூண்டியே விட்டு
பின் தலைமறைவாதல் பொய்மை.

உயிராய் நினைத்து உயிரைக் கொடுத்து
உதவுதல் நட்பில் உண்மை
உடனே இருந்து உயிரை எடுத்து
தான் உயர்தல் நடபில் பொய்மை.

நட்பின் சிறப்பை அறியும் நட்பே
நட்பில் சிறந்த நட்பு
நட்பில் பொய்மை கலந்திருந்தால்
அது சபிக்கப்பட்ட  நட்பு.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


பிரிவுஒளியின் அருமை
இருளில் தெரியும்!
உறவின் அருமை
பிரிவில் தெரியும்!
பிரிவென்றாலே
துன்பம் என்றில்லை!இன்பமும் உண்டு பிரிவினிலே!
கருவறைவிட்டுப் பிரிந்தால்தானே பிறப்பென்பது சாத்தியம்!
அல்லியாம் காதலியை விட்டுச்
சந்திரன் பிரிந்தால்தானே நமக்கெல்லாம் புதுவிடியல்!
மரங்களைவிட்டுப் பிரிந்தால்தானே கனிகளும் அதனுள் விதைகளும் பிறந்தபயன் அடையும்!
விழிகளை இமைகள் பிரியவில்லையெனில்
காட்சிகளேது வாழ்வினிலே?
இரட்டைக்கதவாம் உதடுகள் இரண்டும்
பிரிந்தால்தானே மொழி பிறக்கும்!
பறவைக் குஞ்சுகளும் விலங்கின் குட்டிகளும் தாயைவிட்டுப் பிரிக்கப்படும்போதுதான்
சுயமாய் வாழும்வித்தையை உணர்ந்திடும்!
திரைகடலோடியும் திரவியம் தேடுதல்
குடும்பத்தை விட்டுப்பிரியும் தியாகத்தாலன்றோ
சாத்தியம்?         பிரிவு என்பது கண்ணகிக்குத் துன்பத்தையும் கோவலனுக்கு
மாதவியென்ற இன்பத்தையும் தந்தது முற்பகலில்!
அதே பிரிவு
மாதவிக்குத் துறவையும் கண்ணகிக்கு பத்தினிதெய்வம் என்றபட்டத்தையும்
கோவலனுக்கு கொலைத்  தண்டனையையும்
கொடுத்தது பிற்பகலில்!
மணிமேகலையின் பிரிவால் உதயகுமாரன் அடைந்த இன்னல்கள் எத்தனை?
சீவகசிந்தாமணியில்
எதிரிகளின் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைப் பிரிந்து மயிற்போறியிலேற்றி
விடப்பட்ட  விசயை
சுடுகாட்டில் விழுந்து
பிரசவவலியால் துடித்து மகன் சீவகனைப் பெற்று
அரண்மனையைப் பிரிந்து சுடுகாட்டில்வந்து பிறந்தநிலையை எண்ணி நொந்து இதுவோ மன்னர்க்கியல் வேந்தே என்று அழுதாளே!
வளையாபதியிலும்
பிரிவு வருகிறது
நாயகன் நவகோடிநாராயணன்
பிறகுல மங்கையை மணந்ததால் அக்குலத்தவர் எதிர்ப்பால் நாயகியைப் பிரிந்து அயல்தாடு செல்ல
தன்னந்தனியே இவள் கருவறைநிறைந்தப்
பெண்ணாய் வாட
மகன்பிறந்து வளர்ந்து பெரியவனானதும்
தந்தையைத் தாயுடன் சேர்த்து வைக்கிறான்!
குண்டலகேசியிலும்
பிரிவு வருகிறதே!
திருடன் எனத்தெரியாது காதலித்து மணந்த காளனை மந்திரிகுமாரி பத்திரை
தன்னைஅவன் கொல்ல முயற்சிக்கையில்
தானே அவனைக் கொன்று அவன்பிரிவைத் தாங்காது பௌத்தத்துறவியாகிறாளே!
கம்பனும் கண்டான்
இராமனுக்கும் தந்தை தசரதனுக்கும்  இடையே பிரிவை!
இராமனுக்கும் மனைவி சீதைக்கும் இராவணனால் ஏற்பட்ட பிரிவை!
இராமனுக்கும்
அவன் மக்கள் இலவ குசன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரிவை!
பிரிவென்ற காலத்தைக் கம்பன் சுந்தரக்காண்டமாய்
நம்கையில் தந்தான்!
இன்றைய வாழ்விலும் எத்தனைப் பிரிவுகள்?
மணமுடித்துக் கணவன்வுடு செல்கையில் பெண்ணின் பிரிவு பெற்றோர்க்கு!
அலுவலகம் செல்லும் பெண்களுக்கு இல்லம்திரும்பும் வரை குழந்தைகளின் பிரிவு!
பொருளீட்ட அயல்நாடு சென்றவர்களின் குழந்தைகளுக்கு அன்புத்தந்தையின் பிரிவு!
கூட்டுக்குடும்பத்தை விட்டுப்பிரிந்து தனிக்குடும்பம் ஆனதால் தாத்தா பாட்டிகளின் பிரிவு!
அடுக்குமாடிக் குடியிருப்புகளால்
உறவுகளின் பிரிவு!
நகரமயமாதலால் கிராமங்களின் பிரிவு!
மரங்களை வெட்டுவதால் மழையின் பிரிவு!
நெகிழிகளின் பயன்பாட்டால் மண்ணின் வளம்பிரிவு!
ஆங்கிலமோகத்தின்
விளைவு மெல்லமெல்ல உருவாகும் தமிழின் பிரிவு!
காலத்தின் நியதியால் ஏற்படும்
மரணங்களால் பாசமான உறவுகளின் இழப்பென்னும் ஈடுசெய்யமுடியாத
துன்பப் பிரிவு!
எல்லாம் ஆடிஅடங்கிய பிறகு
நாம் காணும் பிரிவு நம்முடலை விட்டு நம்முயிர் பிரிவதுதான்!

த.ஹேமாவதி
கோளூர்


பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

சிறிய வயதில் உன்னைத்
தொட்டுப் பார்க்க ஆசைபட்டேன் பட்டாம்பூச்சியே!
வளர்ந்த பிறகோ
தொடாமலே உன்னை ரசிக்கத் தெரிந்துக் கொண்டேன்!
உன்னைப் போல பலவிதமான பட்டாம்பூச்சிகள் எங்கள் வாழ்விலும் உண்டென்பதை அறிவாயோ நீ பட்டாம்பூச்சியே!
இமையென்ற சிறகுகள் கொண்ட
விழிகள்இரண்டும்
பறக்காத பட்டாம்பூச்சிகள்தான்
ஆனாலும் அவை
பார்க்கும் பார்வையோ இடம்விட்டு இடம்பறக்கும் பட்டாம்பூச்சிகள்!
தீபாவளிக் காலங்களில் கண்ணில் பறக்கும்  வண்ணவண்ண
பட்டாசு பட்டாம்பூச்சிகள்!
தேர்வுக்காலங்களில்
மாணவர்களின்
மனதிலே பயத்தின் பட்டாம்பூச்சிகள்!
தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால்
சந்தோஷப் பட்டாம்பூச்சிகள்!
முகத்திலே புன்னகையென்ற பட்டாம்பூச்சி சிறகசைத்தால் உலகமே நம்வசமாகும் !
காதலிலே வீழ்ந்துவிட்டால் இரவென்ன பகலென்ன எப்போதும் இதயம் பறக்கும் சிறகில்லா பட்டாம்பூச்சிகளாய்!
காதலரின்விழி கண்டு பட்டாம்பூச்சிகளே மயங்கி மையல்கொள்ளும்!
நிஜபட்டாம்பூச்சி
அவளின் விழிகளை மலரென்று நாடி
அருகே சென்று
அடடா இவை மலரல்ல நம்மைப் போலவே
சிறகசைக்கும் பட்டாம்பூச்சி என தன்னுள் மருங்கும்!
இருந்த இடத்திலிருந்தபடியே
எங்கெங்கோ சுற்றிப் பறக்கும் எண்ணங்கள் ஒவ்வொன்றும் சிறகில்லா பட்டாம்பூச்சிகளே!
பிரிவென்ற வேதனையில் இதயத்தை இடம்விட்டு இடம்நகர்த்தும் எண்ணங்கள்
தலைவனை தலைவியிடமும்
மகனைத் தாயிடமும்
நண்பனை நண்பனிடமும் இணைத்து உறவை மேம்படுத்தும் அன்பு
பட்டாம்பூச்சிகள்!
இறந்தபிறகு
மூடிய பட்டாம்பூச்சிகளாய் கண்கள்!
தானம் என்ற பிறவியின் மூலம் மீண்டும் சிறகசைக்கும் விழிகளாய் பட்டாம்பூச்சிகள் எனபுனர்ஜென்மம் எடுக்கும்!
தானம் செய்யாதோரின் விழிகள் மண்ணிலோ தீயிலோ காணாமல் போகும் மீண்டும் உயிர்த்தெழாத பட்டாம்பூச்சிகள்!

த.ஹேமாவதி
கோளூர்


Friday, 26 April 2019

விண்ணை நோக்கிமண்ணில் பிறந்த மானிடர் எல்லாம்
உன்னதம் தேடிக் காத்திருக்கின்றார்
கண்ணில் தெரியான் கருணை வேண்டி
விண்ணை நோக்கிப் பார்த்திருக்கின்றார்.

ஆதவன் அருளை நாடி நிற்போரும்
மாதவன் அருளை வேண்டி நிற்போரும்
ஈசன் அருளைக் காத்து நிற்போரும்
ஏசுவை வேண்டி மண்டி போடுவோரும்
அல்லா பெயரைச் சொல்லி நிற்போரும்
பார்த்து நிற்கின்றார் விண்ணை நோக்கி.

கட்டந்தரையில் படுத்திருப்போரும்
கட்டையில் போகப் படுத்திருப்போரும்
பஞ்சுமெத்தையில் துயிலுறங்குவோரும்
பஞ்சப் பாட்டுடன் உறங்கமுயல்வோரும்
வேண்டிநிற்கின்றார் விண்ணை நோக்கி
பரலோக அருளைப் பரமன் அருளை.

வேற்றுமை பலதும் போற்றியே நின்று வேறுபாடுகளில் மூழ்கியே நின்று
மற்றவர் தனையே தூற்றியே நின்று
பகைமையை நாளும் வளர்த்தே நின்றோர்
ஒற்றுமையுடனே வேறுபாடின்றி
வேண்டி நிற்கின்றார் விண்ணை நோக்கி.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


மயிலிறகு


புத்தகத்தில் மயிலிறகு குட்டிபோடவில்லை
குட்டிபோடா மயிலிறகு ஆண் என்றான் நண்பன்.

குட்டி போடும் மயிலிறகு எங்கே? நான் கேட்க
உடைந்து விட்ட மயிலிறகைக் காட்டினாள் என் தோழி.

ஆண் இறகும் பெண் இறகும் சேர்த்துவைத்ததாலே
குட்டி ஒன்று பிறந்ததென்று விளக்கினான் என் நண்பன்.

ஆண் இறகோ பெண் இறகோ குட்டி போட்ட மயிலிறகோ
எதுவொன்றும் தெரியாமல் திகைத்து நின்றேன் நானும்.

தீக்காயம் பட்டநேரம் குளிர்ச்சியான மருந்தொன்றை புத்தகத்தில் வைத்திருந்த மயிலிறகில் தொட்டெடுத்து
தீ தந்த காயத்தில் தடவிவிட்டாள் என் அன்னை.

மயிலிறகின் மென்மையோ தாயன்பின் குளிர்மையோ
நினைத்தாலே இனிப்பாக மறக்காத சுகமாக
மயிலையோ இறகையோ பார்க்கையிலே நினைவாக
நினைக்கையிலே நினைக்கையிலே
இருக்கிறது சுகமாக.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*


விண்ணை நோக்கிகண்ணே மணியே எனக்கொஞ்ச
பெண்ணைப் பெற்றவர் யாராயிருப்பினும்
விண்ணை நோக்கி எளிதில் செல்லலாம்!
பெண்குழந்தை முகமே முழுநிலவு!
வசீகரப் புன்சிரிப்போ நட்சத்திரங்களின் கூட்டம்!
இளந்தேகம்தான்
வெண்முகிற்தொகுதி
குழந்தையின் கடைவாயிலொழுகும்
சுவையூறும் எச்சிலுக்கு ஈடாகுமா வான்சிந்தும் மழை?
பெண்குழந்தைப் பெற்றவர்களே
உங்கள் குழந்தையைக் கொஞ்சும்போதெலாம்
விண்ணிலே இருப்பதாய் உணர்வீர்கள்!
அக்குழந்தை வளர்ந்துப் பெரியவளானதும்
சாதனை புரிந்து உண்மையிலேயே உங்களை விண்ணை நோக்கி அழைத்துச் செல்வாள்!
நேசிப்போம் பெண்குழந்தைகளை!

த.ஹேமாவதி
கோளூர்


பௌர்ணமிசிறுபெண்பிள்ளை
வளர்ந்து பருவமெய்தி
பச்சைத்தென்னங்கீற்றுக்
குடிசைக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கும் அழகாய்
சின்னஞ்சிறு பிறையே நாளும் நீவளர்ந்து பருவமெய்தி பௌர்ணமியாகி
மேகக்கீற்றுகளால் ஆன குடிசைக்குள்ளிருந்து
மெல்ல எட்டிப்பார்க்கையிலே
உள்ளம் பறிபோகிறதே!
விழிகள் உண்ணும் எழில்விருந்தே!
எத்தனை விழிகள் உண்டாலும் குறையாத எழில்பந்தே!
இரவுவானின் பேரரசி நீயே!
உலகெங்கும் ஒரே முழுநிலவும் நீயே!
ஆனால்
அவரவர் இயல்புக்கேற்ப எப்படித்தான் நீயும் மாறுகிறாய் இஃதெனக்கு விந்தை!
கற்பனைத்தேரில் ஏறி கவிஞர் செல்லும்போதில் கவிதைவழங்கும் நிலவாய் மாறுகிறாய்!
காதலரிடையே பிரிவு வந்தால் ஒருவர் முகத்தை மற்றொருவர் காண உதவும் கண்ணாடிநிலவாய் மாறுகிறாய்!
ஓடாய் உழைத்த மக்கள் இரவின்மடியில் கண்ணுறங்குகையில்
நல்லுறக்கம் வளர்ந்திட குளுமையூட்டும் நிலவாய் மாறுகிறாய்!
தன்னந்தனியே நெடும்பயணம் காரிருள்தன்னில் செல்வோர்க்கு நல்லவெளிச்சம் தந்திடவே வெள்ளிநிலவாய் மாறுகிறாய்!
நோயின்பிடியில் வீழ்ந்தோர்க்கும்
நலமே தந்திட நீவிழைந்து ஆனந்தநிலவாய் மாறுகிறாய்!
குடும்பத்தைப் பிரிந்து அயல்நாட்டில் தனியே பொருளீட்டச் சென்றோர் வேதனைத் தீர்த்திட
நட்புநிலவாய் மாறுகிறாய்!
ஓவியம் தீட்டுவோர் மனங்களில் புகுந்து சித்திரநிலவாய் மாறுகிறாய்!
இரவுகள் வந்தால் அல்லிகள் விரும்பும் காதல்நிலவாய் மாறுகிறாய்!
எண்ணற்ற விண்மீன்கள் காவல்காத்தென்ன முழுநிலவே நீ அத்தனை காவலையும் மீறி
கடல் ஆறு குளம் ஏரி கிணறு என அனைத்திலும் இறங்கி நீராடி மகிழ்கிறாய்!,
பிறகு நீயே காவல்காக்கும் விண்மீன்களிடம்
கடல் அலைகளை உயர எழுப்பி என்னை முத்தமிட முயல்கிறதென்று குற்றமும் சாட்டுகிறாய்!
நாணத்தை முகில்களுக்குள் மறைத்துக் கொள்கிறாய்!
காதலை அல்லியிதழ்களுக்குள்
புதைத்துக் கொள்கிறாய்!
எத்தனை காதலர்களுக்கு நீ சாட்சியாக இருந்திருப்பாய்!
நீ பட்டியலிட்டால் உனக்கு வானம்கூட போதாதே!
கால்களில்லாமலே தவழும் தேவதைநீ!
வாயில்லாமலேயே
பேசும் தேன்மொழி நீ!
ஒருசமயம் தங்கப்பந்தாய் நீ!
மறுசமயம்
உருக்கிய வெள்ளித்தட்டாய் நீ!
பிரிவினை காட்டாத நல்லநிலவே
செல்வந்தர் ஏழை என எவர்கண்ணுக்கும் ஒரேமாதிரி காட்சித்தரும் எழிலே!
பௌர்ணமி இரவில் கடற்கரைதன்னில் கூடிடும் மக்களுள்
பிரிவினை பார்ப்பதில்லை நீ!
மக்களுள் உறவை வளர்க்கும் வட்டநிலவே நீ வாழீ!
திங்கள்தோறும் வந்தாலும் பௌர்ணமியே நீ சித்திரையில்மட்டும்
எங்களுக்குப் பெருஞ்செல்வமாவாய்!
பௌர்ணமியே உன்னை என்னருமைத் தமிழில் கொஞ்சிடவா?
எவ்வளவு காய்ந்தாலும் யாராலுமே வெறுக்கமுடியாத
குளிர்நிலவே!
வளர்நிலவே!
நிறைநிலவே!
முழுநிலவே!
வட்டநிலவே!
வாட்டம்போக்கும் நிலவே!
சித்திரை நிலவே!
மாசிலா தங்கநிலவே!
குறையிலா நிலவே!
தமிழ்நிலவே!
சுடர்நிலவே!
வெண்ணிலவே!
பால்நிலவே!
சோலைநிலவே!
முத்துநிலவே!
நீ வாழ்க வாழ்கவே!

த.ஹேமாவதி
கோளூர்


காத்திருப்புபுத்தகத்தின் தாள்களுக்கிடையே
மயிலிறகை வைத்துவிட்டு
அப்பப்ப
அது குட்டி போட்டடிருக்குமோ என திறந்துதிறந்துப் பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் சிறுபிள்ளையாய்
என்று என்விழிகளில் நீவிழுந்தாயோ
அன்றிலிருந்து இதோ இன்னும் உன்விழியசைவிலிருந்து
ஒருசிறு சாடைகூட காட்டாமல் இருப்பதனால்
உனக்காக உன்பதிலுக்காக
நீவழக்கமாகச் செல்லும் பாதையிலே தினந்தோறும் வந்துவந்து காத்திருக்கிறேன்!
மயிலிறகாய் என்னை ஏமாற்றிவிடுவாயோ?

த.ஹேமாவதி
கோளூர்


கல்லெறிந்து விடாதீர்கள்..

குடும்ப
உறவுகளே
அமைதியான
குளத்தில்
கல்லெறிந்து
விடாதீர்கள்..

கலங்குவது குளம் மட்டுமல்ல
எறிந்த
கல் மனம் படைத்த உறவுகளும்
மேல்
எழ முடியாமல்
போய்விடும்..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..


.


பெண்கள், ஆண்களின் கண்கள்வலமோ
இடமோ
தெரியாது,
அவளின்றி எவர்க்கும் வாழ்வேது,,,
பெற்றது
மற்றுமல்லாது
கற்றதும்
அவளால்
தானே,,,!

உத்திரம் போல் குடும்பத்திலே
உபத்திரமில்லா வழியினிலே,
நித்திரை கூட தினம் மறந்து,
நீல வான் வெண்ணிலவாய்,,,

பத்திரமாக பார்த்திருந்தால் சித்திரம் போல வளிருப்பாள்,
பெற்றவரை உயர்த்தி வைத்து பெருமைதனை கூட்டிடுவாள்,,,,

உலகத்தை காண வைத்த உத்தமியாய் அவளிருக்க, எத்தனையோ அதிசயங்கள்
கண் முன்னே வந்தாலும்,

எட்டாம் அதிசயம் என எதை எதையோ சொன்னாலும்
உள்ளத்தில் உறவாடும் - என்
உயிரே போனாலும்,

கள்ளமில்லா சொல்லேற்றி
என்னை கடுங்காவல் புரிந்தாலும்
உள்ளத்தில் 
நீ இருப்பாய்
என்றும்
உயிர்
கொடுத்த அதிசயமாய்!

பாலா

கோடைமழை மழைத் தாயின்குமுறல்l

                                               
நீரிடம் சொன்னேன்
தீயிடம் சொன்னேன்
ஊரிடம் சொன்னேன்
உறவிடம் சொன்னேன் பாரிடம் சொன்னேன்
சேரிடமறியா சேர்ந்திருத்தல் எத்தனை
வேர் தடமழிக்கும் என்பதை
வரியாய் சொன்னாலும்
வேறிடம் போகும் கானாங்
குருவிகள் போல் தவிக்கும்
                                 காலம்
வரும்முன்னர் மரம் வளர்த்து
வளம் கொழிக்கும் உபாயந்
                               தன்னை
செவிபெற்றும் செவிடராய்ப்
                       போய் நிற்கும்
சிதிலமனம்கொண்டு ந(ட)டி
                         -ப்பார் முன்பு சேற்றிற்கரைத்த சந்தனமாய்
கவிழ்த்துப்போட்டு
கவி வழியே *கோடைமழை*
வரம்வேண்டி; வரவும்வேண்டி
காத்துக்கிடக்கும் மாந்தரே
*செய்வனத்திருந்தச்செய்* —திருந்தாலே நான்உமக்கு
*பருவத்தே பயிர் வளர்* க்க
உயிர் நீரை மும்மாரி
பொழிந்து இருப்பேனே!
நிழல் நீக்கி நிஜம்தேடும்
மானிடராய் நீர் மாற இன்னமும் தாமதமேன்?

வத்சலா


காத்திருப்புசூல்கொண்ட பெண்ணுக்கு ஈரைந்துத் திங்கள்
காத்திருப்பு!

பிறக்கப் போவது
ஆணா பெண்ணா
என பிரசவ அறைக்கு வெளியே
குழந்தைப் பிறக்கும் வரை அனைவருக்கும் காத்திருப்பு!

பிறந்த மழலை
வாய்மலர்ந்து பேசுவதைக் கேட்கும்வரை செவிகளின் காத்திருப்பு!

சிகைநீக்கி காதுகுத்தி காதணிஅணியும் நாள்வரும் வரை
தாய்மாமனின் காத்திருப்பு!

பள்ளியில் சேர்த்ததும் மாலையில் குழந்தை வீடு திரும்பும்வரை அன்னையின் காத்திருப்பு!

தாத்தா பாட்டியின் கிராமத்திற்குச் செல்ல முழுஆண்டுவிடுமுறை
வரும்வரை மாணவனின் காத்திருப்பு!

பெண்குழந்தைக்கு
தென்னங்கீற்றால் குடிசைவேய்ந்து
சீர்வரிசைகள் செய்ய அக்குழந்தை
வளர்ந்து பருவம் அடையும்வரை
தாய்மாமனின் காத்திருப்பு!

விழிகளின் மோதலில் கலந்து
காதலில் வீழ்ந்தபின்னே அவளின் கடைவிழிப் பார்வையில் சம்மதம் பெறும்வரை காதலனின் காத்திருப்பு!

காதல் திருமணத்தில் முடிந்தால் அவளை மனைவியாக அடைய தாலிகட்டும் வரை
காதலனின் காத்திருப்பு!


சமையல் பணியிலிருந்து விடுதலை அடைய
மருமகள் வீடுவரும்வரை
மாமியார்களின் காத்திருப்பு!

மருமகள் வந்த இரண்டாம் மாதத்திலேயே
மருமகள் விசேஷமா?எனக் கேட்பவர்களை எதிர்கொள்ள
மருமகள் இந்தமாதம் தலைக்கு ஊற்றிக்கொள்கிறாளா?
என சாடைமாடையாய்
கண்காணித்து
மாமியார்களின் காத்திருப்பு!

மலர்வதற்காக
கதிரவன் வரும்வரை தாமரைகளின் காத்திருப்பு இரவு முழுவதும்.
அதேபோல் மலரவேண்டும் என்பதற்காக  நிலவின் வருகையை எதிர்பார்த்து அல்லிகளின் காத்திருப்பு!

த.ஹேமாவதி
கோளூர்


Featured post

கல் தூக்கும் கண்ணே- கிராத்தூரான்

கண் கொள்ளாக் காட்சியொன்றைக் காண வைத்த கண்ணே கண் நிறைந்து மனம் மகிழ்ந்தேன் உன் செயலைக் கண்டே. தும்பியிடம் கல் தூக்கச் சொன்ன நாட்கள் நினைவி...

POPULAR POSTS