Header Ads Widget

Responsive Advertisement

பௌர்ணமி



சிறுபெண்பிள்ளை
வளர்ந்து பருவமெய்தி
பச்சைத்தென்னங்கீற்றுக்
குடிசைக்குள்ளிருந்து
எட்டிப் பார்க்கும் அழகாய்
சின்னஞ்சிறு பிறையே நாளும் நீவளர்ந்து பருவமெய்தி பௌர்ணமியாகி
மேகக்கீற்றுகளால் ஆன குடிசைக்குள்ளிருந்து
மெல்ல எட்டிப்பார்க்கையிலே
உள்ளம் பறிபோகிறதே!
விழிகள் உண்ணும் எழில்விருந்தே!
எத்தனை விழிகள் உண்டாலும் குறையாத எழில்பந்தே!
இரவுவானின் பேரரசி நீயே!
உலகெங்கும் ஒரே முழுநிலவும் நீயே!
ஆனால்
அவரவர் இயல்புக்கேற்ப எப்படித்தான் நீயும் மாறுகிறாய் இஃதெனக்கு விந்தை!
கற்பனைத்தேரில் ஏறி கவிஞர் செல்லும்போதில் கவிதைவழங்கும் நிலவாய் மாறுகிறாய்!
காதலரிடையே பிரிவு வந்தால் ஒருவர் முகத்தை மற்றொருவர் காண உதவும் கண்ணாடிநிலவாய் மாறுகிறாய்!
ஓடாய் உழைத்த மக்கள் இரவின்மடியில் கண்ணுறங்குகையில்
நல்லுறக்கம் வளர்ந்திட குளுமையூட்டும் நிலவாய் மாறுகிறாய்!
தன்னந்தனியே நெடும்பயணம் காரிருள்தன்னில் செல்வோர்க்கு நல்லவெளிச்சம் தந்திடவே வெள்ளிநிலவாய் மாறுகிறாய்!
நோயின்பிடியில் வீழ்ந்தோர்க்கும்
நலமே தந்திட நீவிழைந்து ஆனந்தநிலவாய் மாறுகிறாய்!
குடும்பத்தைப் பிரிந்து அயல்நாட்டில் தனியே பொருளீட்டச் சென்றோர் வேதனைத் தீர்த்திட
நட்புநிலவாய் மாறுகிறாய்!
ஓவியம் தீட்டுவோர் மனங்களில் புகுந்து சித்திரநிலவாய் மாறுகிறாய்!
இரவுகள் வந்தால் அல்லிகள் விரும்பும் காதல்நிலவாய் மாறுகிறாய்!
எண்ணற்ற விண்மீன்கள் காவல்காத்தென்ன முழுநிலவே நீ அத்தனை காவலையும் மீறி
கடல் ஆறு குளம் ஏரி கிணறு என அனைத்திலும் இறங்கி நீராடி மகிழ்கிறாய்!,
பிறகு நீயே காவல்காக்கும் விண்மீன்களிடம்
கடல் அலைகளை உயர எழுப்பி என்னை முத்தமிட முயல்கிறதென்று குற்றமும் சாட்டுகிறாய்!
நாணத்தை முகில்களுக்குள் மறைத்துக் கொள்கிறாய்!
காதலை அல்லியிதழ்களுக்குள்
புதைத்துக் கொள்கிறாய்!
எத்தனை காதலர்களுக்கு நீ சாட்சியாக இருந்திருப்பாய்!
நீ பட்டியலிட்டால் உனக்கு வானம்கூட போதாதே!
கால்களில்லாமலே தவழும் தேவதைநீ!
வாயில்லாமலேயே
பேசும் தேன்மொழி நீ!
ஒருசமயம் தங்கப்பந்தாய் நீ!
மறுசமயம்
உருக்கிய வெள்ளித்தட்டாய் நீ!
பிரிவினை காட்டாத நல்லநிலவே
செல்வந்தர் ஏழை என எவர்கண்ணுக்கும் ஒரேமாதிரி காட்சித்தரும் எழிலே!
பௌர்ணமி இரவில் கடற்கரைதன்னில் கூடிடும் மக்களுள்
பிரிவினை பார்ப்பதில்லை நீ!
மக்களுள் உறவை வளர்க்கும் வட்டநிலவே நீ வாழீ!
திங்கள்தோறும் வந்தாலும் பௌர்ணமியே நீ சித்திரையில்மட்டும்
எங்களுக்குப் பெருஞ்செல்வமாவாய்!
பௌர்ணமியே உன்னை என்னருமைத் தமிழில் கொஞ்சிடவா?
எவ்வளவு காய்ந்தாலும் யாராலுமே வெறுக்கமுடியாத
குளிர்நிலவே!
வளர்நிலவே!
நிறைநிலவே!
முழுநிலவே!
வட்டநிலவே!
வாட்டம்போக்கும் நிலவே!
சித்திரை நிலவே!
மாசிலா தங்கநிலவே!
குறையிலா நிலவே!
தமிழ்நிலவே!
சுடர்நிலவே!
வெண்ணிலவே!
பால்நிலவே!
சோலைநிலவே!
முத்துநிலவே!
நீ வாழ்க வாழ்கவே!

த.ஹேமாவதி
கோளூர்