Header Ads Widget

Responsive Advertisement

அன்றொருநாள்

**

(அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சாதனைக்குப் பின்னே இருக்கும் சவால்களுள் ஒன்று)

அன்றொரு நாள் காலையிலே பள்ளிக்குள் நுழைகின்றேன்,
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி வெளிச்சுவரில் காண்கின்றேன்,
சுவரொட்டியில் என் மாணவனின் சிரித்த முகம் பார்க்கின்றேன்.

பார்த்ததும் பதைத்தது என்னுடைய பிஞ்சு மனம்
என்னதான் நேர்ந்ததென்று அறியத் துடித்தது எந்தன் உளம்.
ஓடோடி வந்தான் ஒரு மாணவன் அந்தக்கணம்
தீவைத்து கொளுத்திக் கொண்டான் தெரிந்தது அக்காரணம்.

வில்லேந்திய இராமனின் பெயர்கொண்ட மாணவன்
குடிகாரத் தந்தையின் அவலத்தை சகித்தவன்
கவலையை உளத்திலே தெரியாமல் மறைத்தவன்
முகத்திலே சிரிப்பொன்றை எப்போதும் வைத்தவன்.

மாற்றுச் சான்றிதழ் தன்னில் கையெழுத்து போடவே
கையூட்டாய் புட்டி கேட்ட அப்பனின் பிள்ளை.
மது விற்கும் பணத்திற்காய் மனிதத்தை விற்றுவிட்ட
இரக்கமற்ற அரசுகளின் தேவையில்லாப் பிள்ளை.

அப்பன் எரிப்பதனால் புத்தகமே இல்லாமல் பலநேரம் எழுந்து நின்று கலங்கி நின்ற பிள்ளை.
ஆறுதலாய் நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு
அன்போடு எப்போதும் எனைப்பார்த்த பிள்ளை.

மேல்வகுப்பு சென்றபின்னும் காலையிலே எதிர்நின்று வணக்கம் சொல்லி வகுப்பு செல்லும் பழக்கமுடைய பிள்ளை.
மது தந்த கொடுமையை சகிக்கவே முடியாமல்
தீ நாக்கை வரவேற்று மடிந்து போன பிள்ளை.

நினைக்கின்ற பொழுதெல்லாம் கண்களிலே வந்து நின்று பலநேரம் மறைக்கிறது கண்ணீர் என் கண்ணை
அன்று ஒரு நாள் கடந்திருந்தால்
அன்று ஒரு நாள் கடந்திருந்தால்
வாழ்ந்திருப்பானோ அந்தப் பிள்ளை?

*சுலீ. அனில் குமார்*