Header Ads Widget

Responsive Advertisement

விண்ணை நோக்கி



மண்ணில் பிறந்த மானிடர் எல்லாம்
உன்னதம் தேடிக் காத்திருக்கின்றார்
கண்ணில் தெரியான் கருணை வேண்டி
விண்ணை நோக்கிப் பார்த்திருக்கின்றார்.

ஆதவன் அருளை நாடி நிற்போரும்
மாதவன் அருளை வேண்டி நிற்போரும்
ஈசன் அருளைக் காத்து நிற்போரும்
ஏசுவை வேண்டி மண்டி போடுவோரும்
அல்லா பெயரைச் சொல்லி நிற்போரும்
பார்த்து நிற்கின்றார் விண்ணை நோக்கி.

கட்டந்தரையில் படுத்திருப்போரும்
கட்டையில் போகப் படுத்திருப்போரும்
பஞ்சுமெத்தையில் துயிலுறங்குவோரும்
பஞ்சப் பாட்டுடன் உறங்கமுயல்வோரும்
வேண்டிநிற்கின்றார் விண்ணை நோக்கி
பரலோக அருளைப் பரமன் அருளை.

வேற்றுமை பலதும் போற்றியே நின்று வேறுபாடுகளில் மூழ்கியே நின்று
மற்றவர் தனையே தூற்றியே நின்று
பகைமையை நாளும் வளர்த்தே நின்றோர்
ஒற்றுமையுடனே வேறுபாடின்றி
வேண்டி நிற்கின்றார் விண்ணை நோக்கி.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*