Header Ads Widget

Responsive Advertisement

நீண்ட பயணம்*



நீண்டதொரு பயணத்தில் நான் மட்டுமே தனித்துச் சென்றிருந்தேன் யாதொரு துணையுமின்றி!
இறக்கைகளின்றியே
இலேசானதேகங்கொண்ட நான்
காற்றிலே மிதந்துமிதந்து பறந்துசெல்கிறேன்
எங்கே செல்கிறேன்
எனத்தெரியாமலேயே!
நீண்டதூரம் எப்படிக்கடந்தேன் என அறியும்முன்னே
ஏன்என்தேகம் குளிர்ந்தது எனவியந்தேன்!
என்வியப்பின் எல்லையைக் கடக்கும் முன்னே
நான் எவ்வாறு வெண்பஞ்சு போலானேன் என திகைத்தேன்!
பஞ்சுபோலான பின்னேதான் எத்துணை இன்பந்துய்த்தேன்!
வான்வீதியெங்கும் விருப்பம்போல் கட்டுப்பாடேதுமின்றி
திருவுலா போனேன்!உலா போனதன் விளைவாய் நான் கருத்தும் கனத்தும் சிலிர்த்தும் குளிர்ந்தும் போனேன்!
மிகமிக உயரத்தே இருந்து நிலமகளைப் பார்த்து இரசித்தநான் திடீரென ஒருநாள் பாரந்தாங்காமல்
அப்படியே மீள்பயணமாய்க் கீழிறங்கினேன் தாரைதாரையாய்!
அப்போது என்னை அனைவரும் மழையென்று ஆனந்தமாய் வரவேற்றார்கள்!
குளிரகுளிர கீழிறங்கிய நான் அப்படியே குவலயத்தைத் தழுவிதழுவி குளிப்பாட்டினேன்!
என்னவொரு நீண்ட மீள்பயணம் சென்றுவந்தேன் நான்!

இப்படிக்கு
கதிரவனால் ஆவியாக்கப்பட்ட
நீர்த்துளியின் நீராவி.

த.ஹேமாவதி
கோளூர்