முத்தான வார்த்தைகளால் சத்தான கருத்துரைத்து
எத்தனையோ உள்ளங்களை உந்தன் பால் கவர்ந்திழுப்பாய்.
மையேந்திய விழி போலப் பொய்யேந்தி நின்றாலும்
மெய்யுருகி நிற்க வைத்துக் கைதட்டி இரசிக்க வைப்பாய்.
உள் மனதின் ஓசைகளை கள்ளமின்றி எடுத்துரைத்துக்
கள்ளமனம் கொண்டவரைக் கண்முன்னே நிற்கவைப்பாய்.
கற்பனையில் நீராடி சொற்பனையில் நீ ஏறி
அற்புதமாம் பதனீரின் அருஞ்சுவையை ருசிக்க வைப்பாய்.
இளமையின் துள்ளல்களை முதுமையிலும் நினைக்க வைத்து
இளமையான வாழ்வினிலே மனம் தழைக்கத் துணைத்து நிற்பாய்.
கண்ணுக்குள் நீ நுழைந்து மூளைக்குள் ஊடுருவி
நெஞ்சத்தை நிறைய வைத்து கொஞ்சிக் கொஞ்சி மகிழவைப்பாய்.
நாலு வார்த்தையில் சுருக்கென்றும்
நாலடியில் நறுக்கென்றும்
பெருவரியில் சிறப்போடும்
சிந்தையைத் தூண்டி நிற்பாய்.
சோகத்தில் நனைகையிலும் சுகம் பகிர்ந்து சிரிக்கையிலும்
வேகத்தை உணரவைத்து யாகத்தை நிறைவு செய்வாய்.
கவிதையே உனக்கு ஒரு கவி புனைய முனைகையிலே
அருவி போல நீ குதித்து ஆரவாரம் செய்திடுவாய்.
பனி மழையில் குளிரவிட்டு தனியழகில் மயங்கவிட்டு
மயங்குவதை நீ இரசித்து மோகினியாய் மிளிர்ந்திடுவாய்......
மோக வலையில் மாட்டி விடுவாய்.
*கிராத்தூரான்*