கூடி விளையாடிய போதும்,
ஓடி விளையாடிய போதும்,
தெரிவதில்லை உறவுகளும்.....!
அவை சார்ந்த மரபுகளும்......!
உயிர்ச்சங்கிலிகளாய்
உணர்வுகளைப் பிணைக்க.....!
அன்பு மட்டுமேபோதுமாயிருந்தது!
அந்த வட்டத்துக்குள் வந்த
சுயநலச் சூறாவளிகளே
உறவு மாற்றங்களால்
உணர்வு மாற்றங்களைத்
திணித்தே வைத்திட்டன!
அதற்கு காலமும் நேரமும்
மட்டும் அல்லாமல்........
சம்பிரதாயங்களும் சில
சடங்குகளும் கூட்டுச்சேர்ந்து.....
வாகாய் பகடையுருட்ட
தோற்றுப்போன தர்மனாய்
நாம் மட்டும் ஒற்றையிலே....!
வஞ்சம் வாய்ச்சவடால் பேசும்!
அகங்காரம் அந்நியமாக்கும்!
ஆதிக்கமனம் வேறுபாட்டை
தூண்டும்!
பொறாமை பொங்குகடலாகும்!
இந்த பகடையாட்டத்தில்
அன்பும் உதாரத்துவமும்
பண்புடன் பாசமும்
யோசிக்கும் கணத்திற்குள்.......
வெட்டுக்காய்களாய்
களபலி காணும்!
உடன் பிறந்தோர் அதனால்
ஒட்டாது போவார்!
தளிர்த்த உண்மைக் காதல்கள்
தணல் மீறிய சாம்பலாகும்!
வைராக்ய விரதங்கள்
வலிக்க வலிக்க அரங்கேறும்!
தேவையின்றி மனபாரங்கள்
அடுத்த தலைமுறைக்கும்
தேவையின்றி கடத்தப்படும்!
ஒன்று கூடும் நேரங்கள்......
ஒப்பனை பூசிய போலிமுகங்களை
வெளிச்சமிட்டுக்காட்டும்!
உடைந்த கண்ணாடிக்கோப்பை
உண்மையில் விரிசல் மூடி
ஒளிர்ந்தே இருப்பினும்
ஓர்குவளை நீருக்குத் தாங்குமோ?
ஆனாலும் ஆன்றோர்
சொல்காக்க குற்றம்
பாராது சுற்றம் கண்டாலும்.......
பட்டென்று வெட்டி விடவே
சில ஒட்டுச்சாறுண்ணிகளின்
பகல் வேசத்தோடு
பல்லிளித்து உறவாடி
தந்து செல்லுமே பிரிவெனும்
கோபச்சதிராட்டம்!
தப்பிக்கும் மார்க்கம் ஒன்றுண்டு
தரணியோரே .....!
தாமரையிலை மேல்
நீர்த்துளியாய் வாழும் வாழ்வே!
🌹🌹வத்சலா🌹🌹