பாதைகள் நீண்டபடியே போகின்றன
பாதச்சுவடுகளின் பதிவுஏதுமின்றி!
பகல் வெளிச்சத்திலேயே
இருள் கனத்துக்கிடக்கின்றது
இதயமற்ற தனவந்தர் போலே!
கர்ப்பத்தின் குழந்தைகளாக
இன்று கூரைகளைக்குள் மனிதர்...!
எந்த வேதநூல்களும் வகுக்காத
தவங்களை வீட்டின் அறைகள்
இயற்றிக்கொண்டிருக்கின்றன!
இருப்பவர் கதவுகளை மூடிட.....
இல்லாதோர் வயிற்றை மூட
வழியற்று வெறித்த பார்வைகளோடு...!
விளக்குகள் ஏற்றலாம் அதற்கு
விந்தை விளக்கம் கூறலாம்!
கைகளைத் தட்டலாம் அதில்
கைரேகைகளும் மறையலாம்!
ஆலயங்களைச் சாத்தலாம்
ஆண்டவனை வீட்டிற்கழைக்கலாம்!
பள்ளிக்கூடங்களைப் பூட்டலாம்
பாடத்தை கணிணிவழி ஏற்கலாம்!
அறிக்கைகள் ஆயிரம் விடலாம்
ஆனபொழுதின் பயன் என்ன?
கண்ணுக்கே புலப்படாத
கரோனாவே கட்டிக்கொண்டது
புண்ணியம் அனைத்தையும்...!
மனிதம் வாழ செய்யாத பிழையை
இன்று இது செய்கிறதே!
வாழ்க்கையை ரசித்தவரெல்லாம்
வாய்க்கரிசி வாங்கிச்செல்ல
வக்கற்று மண்ணுக்குள் போயினரே!
இருந்துவிட்டுப்போகட்டும்........
ஊர் கூடித்தேர் இழுக்க நாம்
உயர்ந்த கரங்களாவோம்!
இந்நிலையில் ......
நேசிக்கத்தெரிர்தோர் யாவரும்
பேசிக்கொள்ளட்டும்!
அதிகம் பேசுபவர் யாவரும்
மௌனம் காக்கட்டும்!
இந்த இடைவெளியில்......!
என்னில் விரிந்த தண்மலர் *ஞானம்*
அது எனக்குத் தந்த போதனை....
இந்த உலகம் உள்ளவரைமறவாதே
*பசிக்கு முன்னால் புத்தன் கூட
ஞானி அல்ல*
🌹🌹வத்சலா🌹🌹