அவர் சொன்னார் இவர் சொன்னார்
அதனால் அது சரியென்பார்
அவர் சென்றார் இவர் சென்றார்
அதனால்சென் றேனென்பார்.
தன்னுடைய தலைவன் எதைச் செய்தாலும் புகழ்ந்திடுவார்
அவருடைய எதிரிகளை அனுதினமும் இகழ்ந்திடுவார்.
சரியான செயல்தானா சிந்திக்கத் தவறிடுவார்
சிந்திக்கும் மனிதர்களை நிந்தித்து மகிழ்ந்திடுவார்.
வார்த்தை அலங்காரத்தில் மயங்கி மதி இழந்திடுவார்
செயல்வீரர் களையெல்லாம் செயல்படாது தடுத்திடுவார்.
ஊருக்கு உபதேசம் நிமிர்ந்து நின்று சொல்லிடுவார்
செயலென்று வரும்போது சொன்ன சொல்லை மறந்திடுவார்.
பிறருக்காய் உழைப்பதாக மேடை போட்டு முழங்கிடுவார்
யாருக்காய் என்று மட்டும் சொல்லாமல் தவிர்த்திடுவார்.
பெயருக்காய் புகழுக்காய் ஊர் உலகம் சுற்றிடுவார்
தனக்காக இல்லையென்று தவணை முறையில் உரைத்திடுவார்.
பழம்பெருமை தனைச்சொல்லி உயர்ந்தவனாய்க் காட்டிடுவார்
தம் பெருமை நிலைநாட்ட முடியாமல் தோற்றிடுவார்
ஏழைக்காய் உழைப்பதாக உழைக்காதோர் பசப்பிடுவார்
உழைக்கின்ற ஏழைகளோ ஏமாந்து நின்றிடுவார்.
நடிப்பவரும், பார்ப்பவரும், இரசிப்பவரும், பழிப்பவரும்
வேடிக்கை மனிதராக இணைந்தபடி தொடர்ந்திடுவர்
வேடிக்கையை வாடிக்கையாய் கூடி நின்று காட்டிடுவர்.
*கிராத்தூரான்*