Header Ads Widget

Responsive Advertisement

கண்ணதாசனென்றொரு காவியம்


செம்புலப்பெயல்நீர் போல கலந்தது காதலர் நெஞ்சங்கள் மட்டுமல்ல!எங்கள் நெஞ்சங்களும் உனது திரையிசைப் பாடல்களும்தான்!

வாழ்வின் எந்த அத்தியாயத்தில் நின்றிருந்தாலும் உந்தன் ஏதாவதொரு பாடல் அதனோடு இசைந்துச் சுவையூட்டிவிடுகிறது!

உனது இன்பப் பாடல்கள் எங்கள் இன்பத்தைப் பெருகச் செய்கின்றன!
உனது சோகப் பாடல்களோ எங்கள் சோகங்களைக் காணாமலோடச் செய்கின்றன!

தமிழரின் இருவிழிகளாம் காதலுக்கும் வீரத்திற்கும் உனது
எழுத்துகள் இயற்கைஎருவாகத் திகழ்கின்றன!

உன்விரல்முனையில்
பிறப்பெடுக்கும் முன் உன் சிந்தனைக் கருவறையில் தங்கியவை எல்லாமே இலக்கியமாய்ப் பிறந்துவிட்டாலும்
இன்னும்நீ எங்களுடனே இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு இலக்கியங்கள் கிடைத்திருக்கும்?

கண்ணனுக்குத் தாசன்நீ! ஆனால் அன்றுமுதல் என்றுமே உலகத்தமிழரெல்லாரும்
உனக்கு தாசர்கள்!

கிமு கிபி போல திரைத்துறையில் சொல்வதென்றால்
கமு கபி அதாவது
கண்ணதாசனுக்கு முன்
கண்ணதாசனுக்குப் பின்
உனக்கு ஈடாக  முன்பும் எவருமில்லை! பின்பும் எவரும் இதுவரை பிறக்கவில்லை!

யுகங்கள் கடந்தாலும் எங்கள் இதயங்கள் இழக்காது உங்கள் நினைவுகளையும்
இனியபாடல்களையும்!
இரவின் நிலவின்மடியில்
மொட்டைமாடியில்
படுத்திருப்போரின் செவிகளிலே உன்திரையிசைப் பாடல்கள் மெலிதாகக் கேட்கவேண்டும்!ஆகா! இதைவிட சொர்க்கமென்று தனியாக வேண்டுமா என்ன?

த.ஹேமாவதி
கோளூர்