ஏழைக்காய் அளிக்கின்ற இலவசம் அனைத்தையும்
பணம் படைத்தோர் வாங்கியே செல்வது திருட்டு.
உழைக்கவே செய்யாமல் உழைப்பதாய் நடித்து
பலன் பெற்று ஏமாற்றிப் பிழைப்பது திருட்டு.
பெரிய இடத்துப் பெண்களாய் காதல் வலை வீசி
கல்யாண வியாபாரம் செய்வது திருட்டு.
கை நிறையக் காசிருந்தும் பசிக்கிறது என்று சொல்லி
பிச்சை வாங்கி மேலும் மேலும் சேர்ப்பது திருட்டு.
ஊரடங்கி இருக்கையிலே ஊராரின் சொத்துக்களை
உரிமை என்று இரகசியமாய் விற்பது திருட்டு.
கேட்பதற்கு நாதியில்லை என்ற ஒரே காரணத்தால்
எளியோரின் உடமைகளை தனதாக்குவது திருட்டு.
பெற்றோரின் தேவைகளைச் செவி கொடுத்தும் கேளாமல்
அவர் சொத்தை அனுபவித்து வாழ்வது திருட்டு.
தனக்குரியது இல்லை என்பது தெரிந்தும்
தனதாக்கிக் கொள்வது மிகப் பெரிய திருட்டு.
நல்லதே செய்வதாய் நம்ப வைத்து அதன்பிறகு
கெடுதல் செய்யும் நம்பிக்கைத் துரோகமும் திருட்டு.
மன்னிக்கவே முடியாத குற்றம் திருட்டு.
*கிராத்தூரான்*