Header Ads Widget

Responsive Advertisement

நெருப்புக் கனவுகள்




கனவே இல்லா மாந்தன் என்று
யாரும் இல்லை உலகினிலே!

கனவில் காணும் யாவும் வாழ்வில்
நனவாய் ஆகும் என்பதில்லை!

உனது கனவும் எனது கனவும் ஒன்றாய் என்றும் இருந்ததில்லை!

நனவும் கனவும் ஒன்றாய் இருந்தால்
நலமாய் வாழ்வு 
நகர்ந்திடுமே!......(1)

துயிலும் போதும் கனவு வரும்
துயிலா போதும்
கனவுவரும்!

உயர்ந்த குறிக்கோள் கொண்டோர்க் கென்றும்
கனவும் நனவும் ஒன்றாகும்!

கயலைக் கௌவும் கொக்கின் கவனம்
கனவில் மாந்தன் கொள்ளவேண்டும்!

உயர்ந்த எண்ணம் கனவாய் அமைந்தால்
அணையா நெருப்பாய்  எரியவேண்டும்!...(2)

மழலை வயதில் தாய்ப்பால் கனவு
தவழும் வயதில்
தரைக்கனவு!

செழித்த பருவந் தன்னில் காணும்
கனவு எல்லாம்
வண்ணமயம்!

விழியால் கலந்த ஆணும் பெண்ணும்
காணும் கனவு
காதலன்றோ?

அழிந்து போன இளமை  எல்லாம்
கனவாய் மீளும்
முதுமையிலே!...…(3)

உயர்ந்த இலக்கு கனவாய்க் கொண்டு
அதனை அடைய பாடுபடு!

தயக்கம் கலக்கம்  தடையாய் வேண்டாம்
இயலும் முடியும் என்றேநினை!

முயலும் போதில் தடைகள் வரலாம்
திறமை இருந்தால்
முன்னேறலாம்!

தயிரைச் சுமந்த பெண்ணின் கனவு
வேண்டாம்! காண்போம் கலாம்கனவு!........(4)

த.ஏமாவதி
கோளூர்