பிறந்த நாட்டை, பிறந்த ஊரை, பிறந்த வீட்டை விட்டு விட்டு
உடனிருந்தோரை, உறவாயிருந்தோரைப் பிரிய முடியாமல் பிரிந்து விட்டு
எல்லைகள் கடந்து, தொல்லைகள் கடந்து, தண்ணீரில் மிதந்து, கண்ணீரில் நனைந்து
சிரத்திலும் மனத்திலும் பாரத்தைச் சுமந்து
உயிரையே நினைத்து உடமைகள் தொலைத்து
என்றாவது ஒருநாள் ஒன்றாகி விடுவோம் என்று நம்பி வாழும் வெளிநாட்டு அகதிகள்.
சொந்த நாட்டிலே, சொந்த ஊரிலே, வெந்து மாளாமல், நொந்து போகாமல்
தீவிரவாதத்தின் தீவிரம் தாளாமல்
ஊர்விட்டு ஊர்சென்று உயிர்காத்து வாழ்கையில்
கொடுமைகளை நினைத்து இரவிலும் தூங்காமல்
தூக்கத்தில் கூடப் பதறியே எழுகின்ற
நினைக்கையில் பயத்தினில் கதறியே அழுகின்ற
என்றுதான் அன்றுபோல் இன்புற்று வாழ்வோம்
என்றெண்ணிக் கலங்கும் சொந்த நாட்டின் அகதிகள்.
உரிமைகள் இழந்தவர், உடமைகள் தொலைத்தவர்
மறுநாட்டில் அடிமைபோல் வாழ்க்கையை வாழ்பவர்
வழிவேறு இல்லாமல் அகதியாய் வசிப்பவர்
தன் நாட்டு வாழ்க்கைக்காய் ஏங்கியே தவிப்பவர்
தன்நாடு செல்கின்ற நாளும் தான் எந்நாளோ
நல்வாழ்வு வாழ்கின்ற நாளும் தான் எந்நாளோ
அகதிகளே இல்லாத நாளும் தான் எந்நாளோ
பொன்நாளாய் அந்நாள் இவ் வுலகினிலே மலரட்டும்
அந்நாளே உலக அமைதி நாளாக மாறட்டும்.
*கிராத்தூரான்