Header Ads Widget

Responsive Advertisement

பல்லாங்குழி



மதியம் வரை இருக்கும் வீட்டிலே வேலை,
உணவுக்குப் பின் தான் விளையாடும் வேளை.
ஓய்வு நேரம் பயனுளதாய் இருந்திடவும் வேண்டும்,
உறங்காமல் விழித்திருந்து அளவளாவ வேண்டும்.
கதை ஒரு பக்கம், கருத்தொரு பக்கம்
கலந்து விளையாடுவர் பல்லாங்குழி பெண்டிர்.

சிவப்பு நிறத்திலே மஞ்சாடி முத்து,
கருப்பும் சிவப்புமாய் குன்றிமணி முத்து.
மருதாணி பூசிய கையாலே எடுத்து,
பல்லாங்குழிகளில் பாங்காக வைத்து,
விளையாடும் அழகினை கண்ணாரப் பார்த்து,
மகிழ்ந்திருக்கிறேன் மனதினில் நினைத்து.

இன்றோ வீட்டிற்குள் முடங்கியே விட்டார்,
கதை பேசும் கலகலப்பை தொலைத்தும்  விட்டார்,
பல்லாங்குழி விளையாட்டை மறந்து போய் விட்டார்,
தொடர் கண்டு கண்ணீர்விடப் பழகிப்போய் விட்டார்,
பாரம்பரியம் அதைப் பரணில் ஏற்றிவிட்டார்,
பழையன கழிதலை வழக்கமாக்கி விட்டார்.

நாகரீகம் அதுவென்று நம்பவைத்தும் விட்டார்....
நம்பியும் விட்டார்.

*கிராத்தூரான்*