Header Ads Widget

Responsive Advertisement

பச்சைக்கிளி



கிள்ளை மொழி பேசி நீ உள்ளம் கொள்ளை கொள்கிறாய்
ஐயோ பாவம் என்று சொல்லவும் வைக்கிறாய்.

என்னே அழகென்று வியக்கவும் வைக்கிறாய்
அழகே ஆபத்தென்று உணரவும் வைக்கிறாய்.

கூட்டமாய்ப் பறக்கையிலே மனம் கவர்ந்து செல்கிறாய்
கூடிவாழ்தல் அழகு என்று புரியவும் வைக்கிறாய்.

ஆசை ஆசையாய்ப் பிடித்து வந்து வீட்டிலே வைக்கிறார்
உன் வலியைப் பார்க்காமல் இறக்கையை உடைக்கிறார்.

நீ பேசும் அழகினையே இரசிக்கவும் செய்கிறார்
நீ பேச உன் நாவை வருத்தவும் செய்கிறார்.

கூண்டுக்குள் அடைத்து உந்தன் சுதந்திரம் பறிக்கிறார்
அடிமையான உன்னிடம் எதிர்காலம் கேட்கிறார்.

வேளைக்கு வேளை நல் உணவதை அளிக்கிறார்
உழைத்து வாழ்ந்த உன்னை சோம்பேறியாக்கி நிற்கிறார்.

இலவசத்தில் மயங்கிவிட்ட இனியவளே நீ கூட
மனிதரைப் போல் சுயமதிப்பை இழந்துவிட்டு தவிக்கிறாய்.

என்னே அழகென்று வியக்கவும் வைக்கிறாய்
ஐயோ பாவம் என்று சொல்லவும் வைக்கிறாய்.

*சுலீ. அனில் குமார்.*