பொய்த்தரை மீதிலே கால்வைத்த
ஆனையின் நிலையே இங்கு
பொய்முகங் காட்டும் மனிதரின்
செயலால் பிறர் பெறும் அனுபவம்!
நிறம்விட்டு நிறம்மாறும் பச்சோந்தி போல இங்கு நொடிக்கொருமுறை
முகத்திற்கு மூடிகள் போடும் மனிதர்கள் ஏராளம்!
பாசத்தைக் காட்டும் விழிகளுக்குப் பின்னே
பாதகம் மறைந்திருக்கலாம்!
புன்முறுவல் என்பது ஆளைமயக்கும் வாசமற்ற காகிதப்பூவாகவும்
இருக்கலாம்!
உள்ளத்தில் ஒன்றாகவும் உதட்டில் வேறாகவும் வார்த்தைகள் பிறக்கலாம்!அதைக் கேட்பவர் உள்ளமோ மெய்யெனநம்பி ஆனந்தக் கூத்தாடலாம்!
பசுத்தோல் போர்த்திய புலிகளை நேரிலும் காணலாம்!
யாவரும் மனிதரே
யாவரும் கேளிரே
என்றெண்ணியே
வாழ்வின் ஓட்டத்தில் நீந்துகையில் எச்சரிக்கை தேவை!
தொலைவில் மீன்முகம் காட்டி
நெருங்குகையில்
முதலைமுகம் காட்டும் மனிதரே
இங்கு அதிகம்பேர்!
இதை உணர்ந்து
வாழ்க்கையை நடத்து!
ஒருபோதும் உன்முகத்திற்கு முகமூடியால் வேடமிட்டுக் கபடநாடகம் ஆடாதே!
த.ஹேமாவதி
கோளூர்