ஊருக்கே உபதேசம் சொல்லி நிற்பார் அவர்
தனக்கொன்று வரும் நேரம் தளர்ந்து நிற்பார்.
எல்லாம் அறிந்தவராய்த் தனைச் சொல்லுவார் சிலர்
நாலும் அறிந்தவரைப் புறம் சொல்லுவார்.
கடவுளே இல்லையென்று கதையளப்பார்
அந்த கதைக்குள்ளும் கடவுளை நினைத்து நிற்பார்.
பெண்ணியம் பேணவே பிறவியென்பார் எனில்
கண்ணியம் காக்கவோ தவறி நிற்பார்.
புண்ணியம் புவியினில் பிறந்ததென்பார் ஆனால்
ஏனிந்தப் பிறவியென்றும் கேட்டு நிற்பார்.
பிறருக்காய் வாழ்வதே வாழ்க்கையென்பார்
பிறர் வாழ்க்கையைச் சுரண்டியே வாழ்ந்திருப்பார்.
கனவுகள் கண்டதில் மகிழ்ந்திருப்பார்
அந்தக் கனவு தான் வாழ்க்கையென்றே இருப்பார்.
பலருக்கும் பல நேரம் உதவி நிற்பார் சிலர்
தன் உறவுக்காய் எதுவும் செய் யாதிருப்பார்.
சிலநேரம் சிலமனிதர் சிறந்து நிற்பார் அவர் பலநேரம் தன்னையே மறந்து நிற்பார்.
காலங்கள் பல நூறு நிலைத்திருப்பார் சிலர்
தன் காலத்தில் அறியப் படாதிருப்பார்,
அதற்கென்று கவலைப் படாதிருப்பார்.
*சுலீ. அனில் குமார்.*