நடப்பட்ட விதை
செடியாக முளைக்கையில் விதை சொல்லியது
பிறந்த பயன் அடைந்துவிட்டேன்!
செடியில் மொட்டுகள் முகிழ்த்து அரும்பென அழகைச் சேர்த்து பூவென மலர்ந்துச் சிரிக்கையில் செடி
சொல்லியது
பிறந்த பயன் அடைந்துவிட்டேன்!
வண்டினங்கள் சுற்றிசுற்றி வர
பூவுக்கோ ஆனந்தம்!
ஆனாலும் பூ சொல்லவில்லை பிறந்தபயன் அடைந்துவிட்டேன் என்று!
கவிஞனொருவன் அங்கே வந்தான்!
பூவின் அழகில் தன்னை இழந்து தீட்டினான் கவிதையொன்று!
அப்போதும் பூ ஏதும் சொல்லவில்லை!
ஓவியனொருவன்
வந்தான் பூவின் அழகை அப்படியே ஓவியமாய்த் தீட்டினான்!அப்போதும் பூவேதும் சொல்லவில்லை!
திடீரென ஒருநாள் தோட்டத்தில் உலாவந்த அவள்
அப்பூவின் அழகில்
மனதை இழந்துப் பறித்திடும் முயற்சியில் தன்விரல்களால் அப்பூவினைத் தொட்டாள்!அப்போது சொல்லியது அப்பூ
பிறந்த பயன் அடைந்துவிட்டேன்!
தொட்டவள் அங்கிருந்ந பலகையைப் பார்த்தாள்.பூக்களைப்
பறிக்காதீர்! என்பதைப் பார்த்தவள் பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டாள்!மீண்டும் அப்பூ சொல்லியது
இனிஎன்னை அவள் பறித்தாலும் பரவாயில்லை
நான்தான் பிறந்த பயனை அடைந்துவிட்டேன் என்று!
த.ஹே
கோளூர்