(அகநூறு தொகைநூலில் இடம்பெற்ற கவிதை)
பூமழை தூவிய புன்னகை கண்டு
பூமகள் அவளென நினைவினில் கொண்டு
பூங்குயில் இசையினைக் குரலினில் கேட்டு
மாமயில் அழகினை அவளினில் கண்டு
மாதவம் செய்தேன் எனநினைத்ததும் உண்டு.
வசந்தமென் வாழ்க்கையில் துளிர்ப்பதாய்க் கண்டு
வலதுகால் வைத்தவள் வருவதாய்க் கண்டு
கவிதையின் கருவினில் அவளையே கொண்டு
கனவினில் காதலை வளர்த்துநான் நின்று
கவிதையாய் அவளையே வடித்ததும் உண்டு.
தேவரும் மயங்கிடும் தேவதை போன்று
தேரிலே ஊர்வலம் வருவதாய்க் கண்டு
தேவை அவள்எனும் ஆசையும் கொண்டு
கணவனாய் மனைவியாய் இருவரும் நின்று
கனவிலே அவளுடன் வாழ்ந்ததும் உண்டு.
காதலைச் சொல்லிட ஆவலாய்ச் சென்று
காரிகை அவளுடன் கணவனைக் கண்டு
காதலை நினைத்து நான் கலங்கியே நின்று
பெருந்திணை என்று நான் எண்ணியே சென்று
கைக்கிளை ஆனதை நினைக்கிறேன் இன்று.
*சுலீ. அனில் குமார்*