தொடரியில்
செல்லும் போதெல்லாம்
காலதரில்
என்கண்களைச்
சொருகுவேன்!
ஓடிடும் இயற்கையில்
என்மனம்தனை
ஆழப் புதைத்திடுவேன்!
புதைகையில்
ஆவல்மிகுந்தே
விழியாலும்
மனதாலும்
பனைக்கூட்டங்களைத்
தேடுவேன்!
நெட்டையும் குட்டையுமாய் கன்றுகள் சூழ
நின்றிருக்கும் பனைக்கூட்டங்களைத்
தேடுவேன்!
அங்ஙனம் தேடுகையில் வரிசையாய் நின்றிருக்கும் பனைமக்களைக் கண்டால் உள்ளம்
குதூகலிப்பேன்!,
குட்டையோ நெட்டையோ ஒத்தையாய் இருந்தாலும் போதுமே எனபதை பதைப்புடன் தேடுவேன்!
ஒற்றைப் பனைமுகம் கண்டாலும் பெருத்த மகிழ்வில்
கையசைத்துப் புன்னகைப்பேன்!
தலைவெட்டிய பனைகளைக் கண்டால் உள்ளம் பதறுவேன்!
வெட்டப்பட்டுச் சாய்ந்துக் கிடக்கும் பனைகளைக் கண்டாலோ அழுதே விடுவேன்!,
கூட்டமாய்க் கண்டால்
பனைமக்காள்!
நீங்கள் நீடூழி வாழ்க! என மனதார வாழ்த்துவேன்!
பனையன்றோ மண்ணுலகக் கற்பகத் தரு!
பனையிருக்கும் இடமெல்லாம் நீர்வளம் இருக்கும்!
முன்னொரு காலத்தில் நான்பார்த்த பனைக்கூட்டங்கள்
இன்றில்லாமல் போனதற்குக் காரணம் தெரியவில்லை!
காணாமல் போன பனைக்கூட்டங்களைத் தான்
நான் இன்னமும் தேடிக் *கொண்டிருக்கிறேன்!*
த.ஹே
கோளூர்