Header Ads Widget

Responsive Advertisement

மீளத்தான் முயல்கின்றேன்


உயிர்த்தெழுந்த உத்தமரின் உயிர்த்தலைக் கொண்டாடுகின்றார்,

உன்னதங்கள் பெறவேண்டி ஒன்று கூடி செபிக்கின்றார்,

செபித்தலின் இடையிலோர் வெடிச்சத்தம் கேட்கின்றார்,

உடனிருந்த பலபேரை பிணமாகப் பார்க்கின்றார்,

உடல் உறுப்பு சிதறிவிட்ட பலபேர்கள் துடிக்கின்றார்,

பார்த்தவர்கள் கேட்டவர்கள் பதறித்தான் நிற்கின்றார்,

அவர்களுள் ஒருவனாக என்னை நான் பார்க்கின்றேன்,

அது தந்த வலிநின்று மீளத்தான் முயல்கின்றேன்.


காலையிலே தொலைக்காட்சியில் காட்சி ஒன்று பார்க்கின்றேன்

பணிசெல்லப் புறப்படும் காவலரைக் காண்கின்றேன்,

அவர் கால்பிடித்து அவர்குழந்தை அழுதவாறே செல்கிறது,

போகாதே, போகாதே என்று சொல்லி அழுகிறது, 

அப்பாவைப் பிரியமுடியா குழந்தையாய் எனை நினைக்கின்றேன்,

ஆறுதல் படுத்தி நிற்கும் அப்பாவாய் நிற்கின்றேன்,

வாழ்க்கையென்ற நிஜம் காட்டும் துயரத்தால் தவிக்கின்றேன்,

துயர்தந்த வலி மறந்து மீளத்தான் முயல்கின்றேன்,

முயன்றால்  முடியாதா? கேள்வியோடு தொடர்கின்றேன்.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*