சூல்கொண்ட பெண்ணுக்கு ஈரைந்துத் திங்கள்
காத்திருப்பு!
பிறக்கப் போவது
ஆணா பெண்ணா
என பிரசவ அறைக்கு வெளியே
குழந்தைப் பிறக்கும் வரை அனைவருக்கும் காத்திருப்பு!
பிறந்த மழலை
வாய்மலர்ந்து பேசுவதைக் கேட்கும்வரை செவிகளின் காத்திருப்பு!
சிகைநீக்கி காதுகுத்தி காதணிஅணியும் நாள்வரும் வரை
தாய்மாமனின் காத்திருப்பு!
பள்ளியில் சேர்த்ததும் மாலையில் குழந்தை வீடு திரும்பும்வரை அன்னையின் காத்திருப்பு!
தாத்தா பாட்டியின் கிராமத்திற்குச் செல்ல முழுஆண்டுவிடுமுறை
வரும்வரை மாணவனின் காத்திருப்பு!
பெண்குழந்தைக்கு
தென்னங்கீற்றால் குடிசைவேய்ந்து
சீர்வரிசைகள் செய்ய அக்குழந்தை
வளர்ந்து பருவம் அடையும்வரை
தாய்மாமனின் காத்திருப்பு!
விழிகளின் மோதலில் கலந்து
காதலில் வீழ்ந்தபின்னே அவளின் கடைவிழிப் பார்வையில் சம்மதம் பெறும்வரை காதலனின் காத்திருப்பு!
காதல் திருமணத்தில் முடிந்தால் அவளை மனைவியாக அடைய தாலிகட்டும் வரை
காதலனின் காத்திருப்பு!
சமையல் பணியிலிருந்து விடுதலை அடைய
மருமகள் வீடுவரும்வரை
மாமியார்களின் காத்திருப்பு!
மருமகள் வந்த இரண்டாம் மாதத்திலேயே
மருமகள் விசேஷமா?எனக் கேட்பவர்களை எதிர்கொள்ள
மருமகள் இந்தமாதம் தலைக்கு ஊற்றிக்கொள்கிறாளா?
என சாடைமாடையாய்
கண்காணித்து
மாமியார்களின் காத்திருப்பு!
மலர்வதற்காக
கதிரவன் வரும்வரை தாமரைகளின் காத்திருப்பு இரவு முழுவதும்.
அதேபோல் மலரவேண்டும் என்பதற்காக நிலவின் வருகையை எதிர்பார்த்து அல்லிகளின் காத்திருப்பு!
த.ஹேமாவதி
கோளூர்