ஆசைமகள்! அன்புமகள்!
ஆங்கொரு, குக் கிராமத்தில்
பாசமலர் எனமலர்ந்த
பண்புமகள்! " மாரிமுத்து,
ராசாத்தி" பெற்றெடுத்த
ராசாத்தி " கோமதியை"
வாசமலர்ச் சரந்தொடுத்து
வாழ்த்திடுவோம்! வா! தமிழா!
கொம்புமலர் போன்ற மகள்!
குடிசையிலே வளர்ந்த மகள்!
அம்பினைப்போல் விரைந்தமகள்!
அனைவரையும் கவர்ந்த மகள்!
தெம்போடு தலைநிமிர்ந்து
"தென்னவர் நாம்" எனச் சொல்லும்
கம்பீரம் நமக்களித்த
கருப்புமலர் கோமதியாள்!
தந்தை மறைந்த துயர்
தாங்காமல் விழும் போதில்,
பந்தமெனத் தாங்கிநின்ற
பயிற்றுநரும் விழி மூட,
சிந்தை மிகக்கலங்கிச்
சிறகொடிந்த பறவையென
வெந்து நொந்து இடர் சுமந்தும்
வென்றெழுந்து நின்ற மகள்!
எந்தஊர்? கோமதி ஊர்?
என வியந்துப் பார்க்கிறதே
இந்தியத் துணைக்கண்டம்!
எழில் திருச்சி மாவட்டம்,
அந்த ஊர் மணிகண்டம்
அருகில்உள்ள"முடிகண்டம்!"
சொந்த ஊர்ப் பெருமை, நொடித்
துளியில்வான் தொட்டதுவே!
முடிகண்டம்! தமிழ்நாட்டின்
மூலையில்ஓர் குறுஞ் சிற்றூர்!
குடிநீர், மின் வசதி இல்லை!
குளம், ஆறு ஏதுமில்லை!
சுடும் நெஞ்சை ஒருசெய்தி!
சுதந்திர ஒளிப்பொழுது
விடியாத கிராமம்!அங்கே
விளையாட்டுத் திடலும் இல்லை!
தோளில் பிறக்கவில்லை!
தொடையில் பிறக்கவில்லை!
தாளில் பிறக்கவில்லை!
தங்கம் வென்ற தங்கமகள்
மூளை கெட்டுப் பிரம்மாவின்
முகத்திலும் பிறக்கவில்லை!
சூளுரைக்கும் ஏழைத்தாய்
சூல்கொண்டு பிறந்த மகள்!
எந்தமொழி? எந்த இனம்?
எந்த நிலம்? எந்த நிறம்?
சொந்தம் எது? பந்தம் எது?
சுயமான ஆற்றல்தான்
தந்தது நம் கோமதிக்குத்
தங்கப் பதக்கத்தை!
சிந்திப்போம் " பிறப்பொக்கும்"
திருக்குறள் தத்துவத்தை!
குடிசைகளில் இன்னும் இங்கே
"கோமதிகள்" எத்தனைபேர்
இடரில் தவிப்பாரோ?
இருளில் கிடப்பாரோ?
அடையாளம் காணட்டும்
அரசாங்கம்! அறிவுலகப்
படியேறிப் பல்துறையில்
பாவையர்முன் னேறட்டும்!
கூடட்டும் தமிழர்புகழ்!
கோமதியின் கால்கள், இன்னும்
ஓடட்டும்! தடகளத்தில்!
உலகரங்கம் அதிரட்டும்!
தேடட்டும் பெருமைகளை!
திசைகள்வர வேற்கட்டும்!
சாடட்டும் பேதத்தை!
சாதனைகள் தொடரட்டும்!!
.......... ......... ..........
- கவிச்சுடர் கவிதைப்பித்தன்