'என்னை நீ பிரசவித்த போது எப்படி அம்மா உணர்ந்தாய்?'
பதினைந்தே வயதான என் மகள் கேட்கின்றாள்
சட்டென்று கேட்டதனால் என் மனைவி திகைக்கின்றாள்,
ஏனம்மா கேட்கின்றாய் என்ற
கேள்வி கேட்கின்றாள்.
பத்து மாதம் சுமக்கவேண்டும், பல வலிகள் தாங்க வேண்டும்
என்று எல்லாம் சொல்வார்கள் அதனால் தான் நான் கேட்டேன்;
பதில் தனையே எதிர் பார்த்து என் மகள் நிற்கின்றாள்.
அவளும் அதைப் புரிய வேண்டும்,
புரிதலோடு வளர வேண்டும்,
தயக்கமே இல்லாமல் பதில் சொன்னாள் என் மனைவி.
பிள்ளையைச் சுமப்பது தான் பெண்மையின் மகத்துவம்
சுமக்க வேண்டும் என்பது தான் பெண்களின் விருப்பமும்.
பயமது இருந்தாலும் பாசம் அதை வெற்றிகொள்ளும்
உறவொன்று வருவதாலே குடும்பமே மகிழ்ச்சி கொள்ளும்.
மிகப் பெரிய வலியென்று பிரசவ வலியைச் சொல்வார்கள்;
என்றாலும் அவ்வலி ஓர் இனிமையான வலி கண்ணே.
"தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா"
என்று அன்று சொன்னானே பாரதி
அது போன்ற இனிமையான வலியம்மா.
சுமக்கின்ற சந்தோஷம் ஈடு இணை அற்றதம்மா,
வெறும் ஒரு சுமையல்ல அது சுகமான சுமை கண்ணே.
நீ பிறந்த தருணமதை மகிழ்ச்சியான தருணமென்பேன்,
தாய் என்ற பட்டத்தை
நான் பெற்ற தருணம் என்பேன்,
தாய்மையின் மகத்துவத்தை
நான் உணர்ந்த தருணமென்பேன்,
பதில் சொன்ன என் மனைவி என்னையே பார்க்கின்றாள்
பரிவுடனே அவள் கையை நான் பற்றி மகிழ்கின்றேன்.
சுமைகள் தான் சுகம் என்றால் சுமப்பது சுகம் தானே.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*