Header Ads Widget

Responsive Advertisement

அன்பென்றால். .. அனில்குமார்


பெற்றது ஏனென்று புரியாமலும்

தாய்ப்பாலின் சுவைகூடத் தெரியாமலும்

வளர்த்தது யாரென்று அறியாமலும்

கையேந்தி நிற்கின்ற குழந்தையிடம் கேட்டால்

கவலையுடன், கண்ணீருடன்

கலக்கமுடன் சொல்லும்

அன்பென்றால் வெறும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை.


குலம் காப்பார் என்கின்ற நம்பிக்கையோடும்

குறைதீர்ப்பார் என்கின்ற எதிர்பார்ப்புகளோடும்

வளம்சேர்ப்பார் என்கின்ற வாதங்களோடும்

தாங்கிவளர்த்த பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட, முதியவர்களைக் கேட்டால் முணுமுணுப்புடன் சொல்வார் 

அன்பென்றால் வெறும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை.


சொத்து தான் பெரிதென்ற கொள்கைகளுடனும் 

சொந்தங்கள் வேண்டாமென்ற எண்ணங்களுடனும்

உறவுகளே இல்லையென்ற இறுமாப்புடனும்

அலைகின்ற அறிவிலிகள் தம்மைக் கேட்டால்

தயங்காமல் பதறாமல் பதில் சொல்லி நிற்பார்

அன்பென்றால் வெறும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை.


காதலே உலகமென்று கலகலப்புடன் திரிந்து

காதலுக்காய் உயிர்கொடுப்பேன் என்று சொல்லி நடந்து

சில பல நலனுக்காய் காதலையே துறந்து

சென்ற பின்னர் நிற்பவரைச் சென்று கேட்டுப் பார்த்தால்

பரிதாப முகத்தோடு பதில் சொல்லி நிற்பார்

அன்பென்றால் வெறும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை.


மனம் தனைப் பாராமல் சதைதனைப்பார்த்து

உயிர் என்று பாராமல் உடம்பாகக் கண்டு

இச்சைதனைத் தீர்த்துவிட்டுக் கசக்கியே எறிந்த 

காமுகனை நினைத்தாலே காறியே உமிழும் பெண்ணவளைக் கேட்டாலோ வெறுப்புடனே சொல்வாள் 

அன்பென்றால் வெறும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை.


அன்பென்றால் வெறும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை

இவர்களைப் போன்ற உயிர்களுக்கிங்கே.


*சுலீ. அனில் குமார்* 

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*