எதிர்காலம் பூச்சியமாய் மாறிவிடாதிருக்க,
எதிர் வரும் தலைமுறை நசியாமல் இருக்க,
அரசு வேலை அடியோடு ஒழியாமல் இருக்க,
அரசுப்பள்ளி தமிழகத்தில் மூடாமல் இருக்க,
எதிர்த்து நின்றாய் அடக்குமுறையை வீறுகொண்ட ஏறுபோல்.
கூடவே இருந்தவர் கைகொடாமல் நிற்க,
ஊடகக் கோமாளிகள் குறைசொல்லி நிற்க,
ஊரிலுள்ள பெருச்சாளிகள்
வசைபாடி நிற்க,
உயர் பதவி வகித்தவர்கள் மிரட்டலோடு விரட்ட,
நிமிர்த்தி நின்றாய் நெஞ்சை நீ எதைக்கண்டும் பதறாமல்.
எடுத்துவைத்த கோரிக்கைகள் மறுக்கப்பட்டிருக்கலாம்,
துணிந்து சென்ற போராட்டங்கள் ஒடுக்கப்பட்டிருக்கலாம்,
அதற்கு பலரும் காரணங்கள் பல உனக்குச் சொல்லலாம்,
அனைத்தையுமே கடந்து நிற்கும் காரணம் ஒன்று நிச்சயம்,
அதுதான் நீ நாடும் மாணவர் நலன் இது சத்தியம்.
கலங்காதே காலம் அது மாறும் விரைவில்,
உன் உரிமைகள் கைகூடும் நாள் இல்லை தொலைவில்,
இழந்ததை நீ அடையும் நாள் மிக அருகில்,
எப்போதும் வைத்துக்கொள் இதை உன்னுடைய நினைவில்,
நெருப்பு போல் இருக்கட்டும் அனைத்தும் உன் மனதில்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*