Header Ads Widget

Responsive Advertisement

நான் யார்?


மஞ்சள் தேய்த்துக் குளித்தேன்!
கருங்கூந்தலை
பின்னலிட்டு
மயக்கும் மல்லிகைச் சரத்தைச் சூடிக்கொண்டேன்!
மயக்கும் இருவிழிகளில்
அஞ்சனத்தைத் தீட்டி விட்டேன்!
புன்னகைக்கும் உதட்டினில் சிவப்புவண்ணம்
மெழுகியே அழகுக்கு அழகு சேர்த்தேன்!
மஞ்சள் மணக்கும் நெற்றியிலே
வட்டநிலா ஒளிர்கிறதோ என்றெண்ணும்படி
குங்குமத்தை இட்டேன்!
கச்சிதமாய் இரவிக்கை அணிந்து தழையத் தழைய பட்டுச்சேலையை
மடிப்பு கலையாமல்
உடுத்திக் கொண்டேன்!
காலிரண்டில் மெல்லச் சிணுங்கி இசையொலிக்கும்
வெள்ளிக் கொலுசுகளைப் பூட்டிக் கொண்டேன்!
இருகை நிறைய
கலகலவென பலவண்ணமாய் மினுமினுக்கும் கண்ணாடி வளையல்களை ஆசையாய் அணிந்துக் கொண்டேன்!
இத்தனையும் முடித்து நிலைக்கண்ணாடியில்
பார்த்து அப்படியே பிரமித்து விட்டேன்!
அப்பப்பா எவ்வளவு அழகுநான் என்று எனக்குள்ளே மலைத்துப் போனேன்!
ஆனாலும் அழுதுவிட்டேன்!
இத்தனை அழகான பெண்ணான என்னைப் பெற்றதை அவமானச் சின்னமாகக் கருதி என்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்ட என் பெற்றோரை நினைத்துக் கொண்டேன்!
ஆறுதலாய் என்னை அணைத்து என்கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்த என் வளர்ப்பு மாதாவை அப்படியே கட்டிக் கொண்டேன்!
இப்போது தெரிகிறதா நான் யாரென்று உங்களுக்கு?
நான்தான்...............
ஆணாகப் பிறந்து
நாளமில்லாச் சுரப்பியின் குறைபாட்டால்
பெண்ணாக மாறி
பலரின் ஏச்சுக்கும் கேலிப் பேச்சுக்கும்
ஆளாகி நான்யார்?என்று எனக்குள்ளே மருகி என்னைப் போன்றோரை நாடி
இப்போது உங்கள்முன்னே
நிற்கின்ற ஒரு
திருநங்கை

த.ஹேமாவதி
கோளூர்