தலைவெட்டுண்ட மனிதன் நிற்பதாய் எண்ணிக் கலங்கிப் போனேன்!
தென்னையே தென்னையே தோகை போலிருக்கும் உன்பச்சை வண்ண கீற்றுகளெங்கே?
தானுண்ட நீரைத் தலையாலே தந்து நன்றிதனை நீகாட்ட உன்இளநீர்க் குலைகளெங்கே?
உன்னுடைய கீற்றுகளில் இன்பத்துடன் பாடிக்கொண்டே
ஊஞ்சலாடும் சிறுசிறு பறவையெல்லாம் எங்கே? எங்கே?
பாவிகள் உன்தலைவெட்ட உன்தலை மீதிருந்த பறவைக் கூடெங்கே?அதிலிருந்த தாய்ப்பறவை எங்கே?அது அன்போடு பொரித்தெடுத்த குஞ்சுகளெல்லாம் எங்கே?எங்கே?
உன்னிடத்திலிருந்து
விழுகின்ற குரும்பைகளுக்காக காத்திருக்கும் குழந்தைகள் எங்கே?
காய்ந்த ஓலை வீழாதா?துடைப்பம் செய்ய நடுக்குச்சிகள் கிட்டாதா?எனக் காத்திருக்கும் கிழவி இனி என்செய்வாளோ?
தென்னையே தென்னையே தலையில்லாத் தென்னையே நான் இவ்வளவும் கேட்கிறேன்
பதிலேதும் உன்னிடத்திலிருந்து
வரவில்லையே!
ஓ.....உனக்குத்தான்
தலையில்லையோ?
வெறும் வெற்றுத்தண்டாய்
காட்சித் தரும் தென்னையே
மண்ணுக்குள் மறைவாக
ஒளிந்திருக்கும் உன் வேர்க்கூட்டம் படுகின்ற இன்னல்கள் யாரறிவார்?
உணவின்றி அவையெல்லாம் மெல்ல மெல்ல சாகும் நிலைதன்னை நினைத்தாலே நெஞ்சமெல்லாம் குமுறுதே!தலையில்லா என் தென்னையே உன்னால் தடுமாறித் தவிக்கின்ற எனக்கு ஆறுதல் ஆர்தருவார்?
த.ஹேமாவதி
கோளூர்