Header Ads Widget

Responsive Advertisement

அறியாத வயது - ஹேமாவதி



எல்லாம் அறிந்துவிட்டேன் என்றநிலை எப்போதும் எனக்கில்லை!

ஆனாலும் ஏதும் அறியாத வயதிலே

நானிருந்த நாட்களைத் திரும்பதிரும்ப நினைத்துப் பேரானந்தங் கொள்வேன்!

புத்தகத்தின் தாள்களுக்கிடையே

மயிலிறகை வைத்துவிட்டு குட்டியெப்போது போடும்?என எதிர்பார்த்ததும்

பொம்மையின் தலைமுடியில் வளரும் என்ற நம்பிக்கையில் தேங்காயெண்ணெய்த் தடவிவாரியதும்

கொக்குகள் பறப்பதைப் பார்த்தால் துள்ளிமகிழ்ந்து

கொக்கொக் பாலாடை பாடியதும்

ஆவென வாய்ப்பிளந்து

பாட்டி சொல்லும் பாலநாகம்மா கதையைக் கேட்டதும்

இரவு 12 மணிக்கு பேய்கள் நடமாடும்

என்றஞ்சியதும்

தாத்தாவிடம் மிட்டாய்வாங்க காசு கேட்டு வாங்கியதும்

தாமஸ்தாத்தா கடைக்கு ஓடிச்சென்றதும்

விழுந்த பல்லை யாருக்கும் தெரியாமல் மண்தோண்டிப் புதைத்து அது செடியாய் வளரும் எனநம்பியதும்

காட்டுக் களாக்காய்

வாங்கித் தின்கையில் அதன்விதையை நீளவாக்கில் பிளந்து பாஸா? பெயிலா? பார்த்ததும்

வீட்டிற்குப் புதியவர்கள் வந்தால் ஓடோடிச் சென்று அம்மாவின் முந்தானைக்குப் பின் நின்று கொண்டதும்

தப்பு செய்துவிட்டால் சாமி கண்ணை குத்திவிடும் என்றஞ்சியதும்

தீபாவளியின்போது

விடியலிலே எழுந்தால் நரகாசுரன் சாகும்போது அவன் ஓலமிடும் சத்தம் கேட்குமென என்அண்ணன் சொன்னதை நம்பியதும்

கடலுக்குள் சென்றால் நாகலோகம் இருக்குமென என்பாட்டி சொன்னதை நம்பி கடலுக்குள் செல்ல ஆசைபட்டதும்

தென்னையின் குரும்பைகளை உடைத்தால் உள்ளே குட்டியாக தேங்காயும் நீரும் இருக்குமென நம்பி ஏமாந்ததும்

இருட்டிலே பேய் ஒளிந்திருக்கும் என்றஞ்சி வீட்டுக்குள்ளே இருந்ததும்

மழைக்காலத்தில் இடிச்சத்தம் கேட்கையில் பீமனும் துரியோதனனும் சண்டையிடுகிறார்களென்று நம்பியதும்

பேசுகையில் திக்கியதால் தோழிகளின் கேலிகேட்டு மனம்வருந்தி கூழாங்கல்லை வாயில்போட்டுச் சப்பினால் திக்காமல் பேச்சுவரும் எனநம்பியதும்

என்அப்பாதான் உலகிலேயே  வலிமையான அழகான அறிவான  அப்பா என நினைத்துநினைத்து 

இறுமாந்ததும்

அப்பாவின் முதுகிலே சறுக்குமரம் ஆடியதும்

பெண்கள் புடவை கட்டிக்கொண்டால் குழந்தை பிறக்குமென்று நம்பியதும்

இறந்தவர்கள் யாவரும் சாமிகிட்டப் போவார்கள் எனக்கருதியதும்

இராத்திரியில் குழலூதினால் பாம்புவரும் என்றஞ்சியதும்

வட்டநிலா வானில் தெரிந்தால் அதனுள்ளே வடைசுடும் பாட்டியைப் பார்த்து இங்கிருந்தே பேசுவதும்

எல்லாமே இன்னும் எவ்வளவோ

சொல்லாதது எல்லாமே என்

அறியாத பருவத்தில் நானிருந்த நிலையாகும்!

என்வாழ்வின் பொற்காலம் இதுவே! மீண்டும் அறியாதப் பருவத்துள் சென்றிட ஏங்கும் மனதுடனே  என்றும்

இருக்கிறேன்!



த.ஹேமாவதி

கோளூர்