வென்றுவா என்று வழியனுப்பு
நான் சென்று வருகிறேன் கண்ணே,
பாசமற்றுப் போகவில்லை
தேசப்பற்று அழைக்கிறது,
நேசம் குறைந்து செல்லவில்லை
தேசம் காக்க செல்கிறேன் நான்,
காதல் வந்து தடுத்தாலும்
கடமை வந்து அழைக்கிறது,
கார்விழியாள் வழியனுப்பப்
போர்முனையில் நின்றானவன்.
அவனாகச் சென்றவன்
அதுவாக முற்றத்தில்,
கலங்காதே என்றவன்
கண்ணாடிப் பேழைக்குள்,
கொடிகாத்து நின்றவன்
கொடி போர்த்தி பெட்டிக்குள்,
கலங்குகின்றார் கண்டவர்கள்,
வணங்குகின்றார் வந்தவர்கள்,
வீரநடை போட்டுவந்தாள்
விடைகொடுத்து அனுப்பியவள்.
காதலிலே வைக்கவில்லை
ஒருகுறையும் நீ எனக்கு,
பெருமையிலே காணவில்லை
ஈடு இணை நான் உனக்கு,
கடைசிவரை துணைநிற்கும்
உன்னுடைய நினைவெனக்கு,
அனைத்திற்கும் பரிசாக
அளிக்கின்றேன் நானுனக்கு,
சொல்லாமல் சொல்லியது...
சொல்லாமல் சொல்லியது
பெண்ணவளின் கண்ணசைவு.
பெருமையுடன் அளித்து நின்றாள்
நெற்றியிலே ஒரு முத்தம்,
அனைத்தையுமே நினைவு கூர்ந்து
மொத்தமாய் ஒரு முத்தம்,
அனைவரையும் கலங்கவைத்து
மொத்தமாய் ஒரு முத்தம்.
*சுலீ அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி