Header Ads Widget

Responsive Advertisement

உள்மன ஓசைகள் 2



திரண்ட இளமையின் தலைவாசலில்
நின்றிருந்தேன்!
பெரியோர்களால் நிச்சயித்து மணவறையில் என்கரம் பிடித்துக் கணவனானாய்!
உடனே சூலுற்றேன்!
பேர்சொல்ல குலம்தழைக்க ஆண்மகவொன்றீந்தேன்!
இன்பம் இன்பம் எனமகிழ்ந்த வேளையிலே கூடாநட்பிலே நீசேர்ந்தாய்!
வேண்டா பழக்கத்தில் நீ நுழைந்தாய்!மதுவுக்கு அடிமையாகி கட்டிய மாதென்னை அடித்து உதைத்தாய்!,
அளவுக்கதிமான மதுவுண்டு நலங்கெட்டு என்னையும் ஐந்துவயதே ஆன இளம்பாலகனையும் நிராதராவாய்த் தவிக்கவிட்டு கண்மூடி விட்டாய்!
இளம் கைம்பெண்ணாய் சுமையான இளமையோடு
குடும்பத்தை நடத்திட இட்டிலிகடை நடத்தினேன்!வேகும் இட்டிலிகளை நான் அவித்தெடுக்க
வேகும் என்இளமையை
அவித்தெடுக்க நீயின்றி நான் தவிக்க
சூழ்ந்துள்ள ஆடவர்களின் நிர்வாணப் பார்வைகளுக்கு மத்தியிலே போராடி நான் நாட்களை நடத்திடுங்கால்
இருண்ட என்இரவுகளில் உறங்கும் மகனை அரவணைத்து  நான் படுக்கையிலே
சாய்கையிலே  ஊரே அடங்கிவிட்ட
மயான அமைதியை
ஊடுருவி என்உள்மனதில் நீயிருந்து
முதலிரவில் அன்பொழுக பேசிய பேச்செல்லாம் மெல்லிய ஓசையாய் செவியிரண்டில் கேட்டு கண்ணிரண்டில் நீர்வழிந்து என்மகனின் மேல்வீழும்!பதறி நான் ஓசையின்றி கண்ணீரைத் துடைக்கையில்
மீண்டும் என்மனதின் உள்ளிருந்து நீபேசிய காதற்மொழியெலாம்
கேட்டு விக்கித்துப் போவேன்!
நம் மகனை நீ கொஞ்சியதும் கொஞ்சுகையில்
மொழிந்ததையும் அச்சுமாறாமல் அப்படியே இன்றளவும் பலமாய் கேட்குதய்யா!
கைம்பெண்டிர் உள்மனதெல்லாம்
அவரவர் கணவர்களின்
அருங்காட்சியகங்களாய்
இரவெல்லாம் இப்படித்தான் ஓசையெழுப்பி உறக்கமிலா இராத்திரியில் தவிக்க விடுமா?

த.ஹேமாவதி
கோளூர்