*தீட்டு*
தீட்டு...
தீட்டு...
அலறும் அரச குடும்பம்.
ஆமோதிக்கும் ஆன்மீகம்.
தீட்டு...
தீட்டு...
உன் அறிவைத் தீட்டு.
உன் தேவை-
நாட்டுக்கு
வீட்டுக்கு
பாட்டுக்கு
ஆனால்
காட்டுக்கு?
மறுப்பது எது?
அதிகார அரசா?
அரசு சாசனமா?
அரிகரசுதனா?
அரச குடும்பம்
அதிகார வர்க்கம்
ஆதாய அரசியல்.
பெண்மையின்
பிற்போக்கு பார்வை
தீர்பில் தெரிந்தது.
ஆணிண் சட்டம்
அனுமதி என்றது
பெண்ணின் சட்டம்
அவசியமில்லை என்றது.
உன் உறவை
தொப்புள் கொடியில்
தொடர்ந்தபோது
படாத தீட்டு.
உன் உணவை
உதிரமாக்கி
மடி கிடத்தி
மார்பில் ஊட்டியபோது
படாத தீட்டு.
அன்பானவனோ
அயோக்கியனோ
கொண்டவனின்
உயிர்நீர் சுமந்து
உருக் கொடுத்து
உன்னுள் வளர்த்தபோது
படாத தீட்டு.
மாலையிட்டவன்
மாலையிட்டதும்
பாதம் பற்றி
பணிந்தபோது
படாத தீட்டு.
பம்பையில் உனை
பார்த்தாலே
பட்டுவிடுமெனில்
அது
பக்தி அல்ல
பாசாங்கு.
நாட்டில் தாய்மை
நதியில் தாய்மை
பாட்டில் தாய்மை
ஏட்டில் தாய்மை
பட்டறிவில் மட்டும்
இல்லை தாய்மை.
விடு
விடு
கருப்புடை தரித்தும்
கட்டியவனை
கடவுளாய்க் கருதுவதை விடு.
காலைத் தொழல் விடு
காலை தொழல் விடு
மாலைத் தொழல் விடு
மாலை தொழல் விடு.
கந்துவட்டி
காசில் செய்திடும்
கன்னிபூசை விடு.
அதன்பின் பார்
அய்யப்பனே
அழைப்பான். உன்
அத்தானே
அழைத்து செல்வான்.
அறி
அறி
அரிகரனை அறி
ஆன்மீகம் அறி
ஆண் ஆணவம் அறி.
உன்னை விடுத்து
உலகிலோன்றும் இல்லை
ஏன்
உலகே இல்லை.
🙏த.தாஸ்🙏
அ.உ.நி. பள்ளி,
அனுப்பம்பட்டு.