1.மழை
வானமங்கை தனது
கார்மேகக் கூந்தலை அவிழ்த்துத் தலைநீராட வையமெல்லாம் கொட்டியது மழை!
2.வியப்பு
வாசலோரம்
இருந்த முல்லைக்கொடி
வாசலிலே
அவள் இட்ட
மார்கழிக் கோலம்
கண்டு மனதுக்குள்
தான்தான் பூக்களை
பூக்கவைக்கிறோம்
என்றால்
இப்பெண்ணும்
தன்விரலாலே
பூக்களைப் பூக்கவிட்டு கோலம் காட்டுகிறாளே என வியந்தது!
3.தனிமை இல்லை
தன்னந்தனியாய்
ஒற்றைப் பனைமரம்!
ஆனாலும் தனிமை இல்லை!
தென்றலோடு பேசி
கதிரவனைத் தழுவி
மண்ணோடு குலாவி நீரோடு உறவாடி தனிமையைப் போக்கி பறவைகளுடன்
இனிமையாய் இருக்கிறது!
4.ஆகாயத்தாமரை
குளம் முழுவதும்
இறைவனைப் போல
எங்கும் நீக்கமற
நிறைந்திருந்தது
ஆகாயத்தாமரை
பச்சைப் பட்டாடை விரித்தது போல்!
ஆங்காங்கே ஏற்றிவிட்ட தீபங்களாய் வண்ணமலர்கள்!
த.ஹேமாவதி
கோளூர்