நிற்கும் கர்பிணி பெண்ணுக்கு
எழுந்து இடம் தரும்
ஊனமுற்ற முதியவரின்
முகத்தில்
கிழிந்த செருப்பினை
தைத்துக்கொடுத்துவிட்டு
இரு கைகளால் காசினை வாங்கி
கண்களில் ஒற்றிக்கொள்ளும்
செருப்பு தைப்பவரின்
முகத்தில்
பச்சை விழும்வரை
பொறுமையாய் சிக்னலில் காத்திருந்து
சைக்கிள் நகர்த்தும்
முதியவரின் முகத்தில்
யாரென தெரியாத பெண்ணை
கிண்டல் செய்த வாலிபனிடம்
சண்டையிட்டு அடி வாங்கி
திரும்பும் அந்த
பெரியவரின் முகத்தில்
இல்லீங்க கொஞ்சம்
மனசு வையுங்க புள்ள படிப்புக்குத்தான்
கொஞ்சம் சேத்து குடுங்கவென
வட்டிக்காரனிடம் கெஞ்சும்
அவர் முகத்தில்
உழவுக்கு தள்ளுபடி கேட்டு
சாலை மறியலில்
காவல்துறையால் அடிவாங்கும்
அவர் முகத்தில்
உலகமே தன் கையிலென
புன்னகையோடு
பிள்ளை கை பிடித்து போகும்
அவர் முகத்திலென
எல்லாவற்றிலும்
பொருத்திப்பார்க்கிறேன்
பொருந்திப்போகிறது
இறந்துவிட்ட
அப்பாவின் முகம்.....
வீ.கதிரவன்