மார்கழி என்றொரு பொக்கிசம் தமிழர்க்குக் கிடைத்திட்ட பொற்காலம்!
வெண்பனிச் சேலையில் மேனிசிலிர்த்திடத் தொட்டு எழுப்பிட மார்கழி வந்துவிட்டாள்!
இனி நாளும் நம்முடன் மகிழ்வினை ஊட்டி
இன்னிசை பாடிடுவாள்!
இசையையும் கலைஞர்களையும்
கூடலிலே இணைத்திடுவாள்!
ஏனோ பனித்திரையாலே
பூமகள் மேனியைத் தொடமுடியாவண்ணம்
காதலன் ஆதவனை ஊடலில் வாட்டிடுவாள்!
சிலிர்க்கும் பனியிடை உயிர்க்கும் வளியினை நிரம்பவழங்கிடுவாள்!
உயிர்கள் நலமுடன் ஓங்கி வாழ்ந்திட வழிவகைச் செய்திடுவாள்!
வீதிகள் யாவையும்
கோலங்கள் பூத்திடும் தோட்டமாய் மாற்றிடுவாள்!ஆலயந்தோறும் மாந்தரைக் கூட்டி பூசனை நடத்திடுவாள்!மனங்களில் இறைவனை நிரப்பி ஆளுமைப் பண்புக்கு உரங்களை ஊட்டிடுவாள்!முகங்களில் அழகினைக் கூட்டிடுவாள்!கன்னியர் நாவினில் திருப்பாவையும் திருவெம்பாவையும்
இசைத்திடச் செய்திடுவாள்!
பாவையர்நோன்பில்
பாவையரை நிறுத்தி வேண்டுவன வழங்கிடுவாள்!
ஆண்டு முழுவதும்
மார்கழியாகவே
இருந்திடக் கூடாதா?
என்றே ஏங்கிடவைத்து
தைத்திங்கள் வந்திட
நம்மைப் பிரிந்திடுவாள்!இனி
மார்கழி என்றொரு மாதநங்கையின் வருகைக்கு ஒருவருடம் காக்கவைப்பாள்!
த.ஹேமாவதி
கோளூர்