பலவிதமாய் நானும் இருப்பேனே
வண்ணமயமாய் ஜொலிப்பேனே
நிலம்தாங்கும் நீர் போல
என்னுள் உள்ள வண்ணங்கள்
பல பல மதிப்பு பெற்றிடுமே
சிறியோரும் பெரியோரும் என்னைத் தூக்கி சுமக்கின்றார்
ஆடவரின் இடதுபக்க நெஞ்சில் நானும் நிற்பேனே
பெண்களின் பையினுள்ளே இருப்பேனே
உங்கள் எண்ணத்தை நானும் வெளிப்படுத்தி
பிறர் மனதையும் கொள்ளை கொள்வேனே
அறிஞர்கள் கையில் ஆதவனாய்
முட்டாள் கையில் மூடனாய்
அதிகாரி கையில் அதிகாரமாய்
என்றும் நானும் வீற்றிருப்பேன்
பாமரனான மனிதனையும் படிப்பாளியாகவும் படைப்பாளியாகவும் மாற்றிடுவேனே
என்னுள் உள்ள வண்ணத்தால்
ஓருயிரை எடுக்கவும் கொடுக்கவும் முடிந்திடுமே
தங்கத்திலே நானிருந்தாலும்
தகரத்திலே நானிருந்தாலும்
என் நிலையில் என்றும் மாற்றமில்லை
அறிவாளி கையில் இருப்பதனால்
நான் ஆணவமாய் இருப்பதில்லை
மூடர் கையில் இருப்பதனால்
நான் பணி செய்ய என்றும் மறுப்பதில்லை
நான் எங்கே எப்படி யாரிடமிருந்தாலும்
என் தன்மையில் என்றும் மாற்றமில்லை
தி.பத்மாசினி