பெற்றவர்கள் விருப்பத்தை மதிக்கவும் இல்லை,
மற்றவர்கள் சொன்னதைக் கேட்கவும் இல்லை,
பெரிதென்று காதலை முடிவு செய்திட்டார்,
பெற்றோரை மதிக்காமல் ஓடிப் போய் விட்டார்.
வளர்த்துவிட்ட பெற்றோர் சொல் கேட்கவே இல்லை,
அவர்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை,
பிள்ளைகள் பிள்ளைகளாய்க் கடமை செய்யவில்லை,
செய்தது சரியென்று நான் சொல்லவிழையவில்லை.
என்றாலும் பெற்றோரே,
உற்றாரே, மற்றோரே
ஊட்டிவளர்த்த கையாலே நச்சை நீ ஊட்டலாமா?
ஊராரை நினைத்து நீ உன் ஊனை அறுக்கலாமா?
பெற்றவரே கூற்றுவனாய்
அற்ற செயல் செய்யலாமா?
பெற்றது நீ தானா? பெற்றது நீ தானா? என்று கேட்க நீ வைக்கலாமா?
வாழவைத்து மகிழ்விக்க மனமில்லையென்றாலும்,
வாழவிட்டு ஒதுங்கி நிற்க முடியாதா உங்களால்?
குலம் தழைக்க வேண்டும் என்ற எண்ணமின்றிப் போனாலும், குடிகெடுக்கவேண்டும் என்ற எண்ணம் தொலைந்து போகாதா?
மணப்பிச்சை கொடுப்பதற்கு மனம் இரங்கவில்லையென்றால்,
உயிர்ப்பிச்சைக் கொடுத்துவிட்டு ஓரமாகச் சென்றிடுவீர்,
உன்னிலிருந்து வரவில்லை, உன்மூலம் வந்தார்கள்,
கொடுப்பது உன் கடமை எடுப்பது உரிமையல்ல.
ஆகவே மானிடரே!
ஆறறிவு மானிடரே!
அவர்களை வாழவிடுங்கள்,
பாவம், வாழட்டும் அவர்கள்.
சுலீ அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி