அகவும் மயிலோ,
அலறும் ஆந்தையோ,
அலப்பும் குரங்கோ,
அல்ல நீ மனிதா.
உறுமும் புலியோ
கத்தும் ஆடோ
முரலும் வண்டோ,
அல்ல நீ மனிதா.
குழறும் கூகையோ,
குனுகும் புறாவோ,
கூவும் சேவலோ,
அல்ல நீ மனிதா.
சீறும் பூனையோ,
கீச்சிடும் எலியோ,
பிளிறும் யானையோ,
அல்ல நீ மனிதா.
ஊளையிட நீ நரியும் அல்ல,
எக்காளமிட நீ எருதும் அல்ல,
முழங்கித்திரிய நீ சிங்கமுமல்ல,
கொக்கரிக்க நீ கோழியுமல்ல.
கரைந்து திரிய நீ காக்கையுமல்ல,
சொன்னதைப் பேசநீ
கிளியும் அல்ல,
உள்ளதைப் பேசி,
நல்லதைப் பேசி,
தப்பை உணர்த்த தெம்பாய்ப் பேசி
தலை நிமிர்ந்து நிற்கும்
பேசும் மனிதன்.
பேசு மனிதா பேசு,
பேசத் தெரிந்தவனே பேசு,
மனதில் இருப்பதைப் பேசு,
நல்லதை நல்லதென்று பேசு,
அல்லதை அல்லதென்றும் பேசு,
உண்மையை உரக்கப் பேசு,
தவறை உணர்த்திப் பேசு,
உணர்ந்து திருந்தும்வரைப் பேசு,
பேசு மனிதா பேசு.
(ஒலி மரபுக் கவிதை என்று சொல்லலாமா?)
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*