இருக்கின்ற வீட்டினை அடமானம் வைத்து,
அதற்காகச் சில லட்சம் கடனாகப் பெற்று,
கடன்காரனாகவே வாழ்கின்றார் என்றால்... அவர்கள் சாமானியர்.
சொத்துக்கள் பலவற்றைச் சொந்தமாய்ப் பெற்றும்,
இல்லாத சொத்தினை அடமானம் வைத்து,
கவலையே படாமல் களித்து மகிழ்ந்தால்... அவர்கள் மேன்மக்கள்.
கடனை அடைக்க முடியவில்லையே என்று,
சூழ்நிலை தனையே மனத்தில் நினைத்து கண்கலங்கி, தலைகுனிந்து, ஒடுங்கிப்போய் நின்றால் அவர்கள் சாமானியர்.
வங்கியில் கோடிகள் கடனாகப்பெற்று,
வட்டிகூடக் கட்டாமல் ஓடி ஒளிந்து,
உல்லாச வாழ்க்கை வாழ்கிறார் என்றால்.. அவர்கள் மேன்மக்கள்.
கையிலுள்ள பணத்தை வங்கியில் போட்டு,
அதை எடுக்க கட்டணம் வங்கிக்குத் தந்து,
வரிசையில் காத்து நிற்பவர் என்றால்...
அவர்கள் சாமானியர்.
கடனாகக் கொடுத்த பல கோடிப் பணத்தை
வசூலிக்க வங்கியே பணம் செலவு செய்தும், ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லையென்றால் அவர்கள் மேன்மக்கள்.
சொல்லுங்கள் நீங்கள் யார்? சாமானியரா? இல்லை மேன்மக்களா?
*சுலீ அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.