தீப ஒளித் திருநாளாய் தீபாவளி இருந்த நாட்கள்,
பட்டாசாய் காளையரும் மத்தாப்பாய் கன்னியரும்
கடைக்கண் பார்வையிலே காதல் மொழி சொன்ன நாட்கள்.
பாவாடை தாவணியில் புதுக்கொலுசு சலசலக்க,
மல்லிகைப்பூ கமகமக்க, பூவையர்கள் புன்னகைக்க,
பொன்னகையின் மின்னலினை புன்னகையே வெற்றிகொள்ள
அது தந்த மயக்கத்தில் காளையர்கள் நின்ற நாட்கள்.
எட்டுமுழ வேட்டிகட்டி அதை எடுத்து மடித்துக் கட்டி,
மிதிவண்டி மீதமர்ந்து மிதமாக அதைமிதித்து
பின்தொடர்ந்து இளைஞர்கள் கோவிலுக்குப் போன நாட்கள்
தெய்வத்தை வணங்காமல் தேவதையை இரசித்த நாட்கள்.
கண்சிமிட்டிக் கன்னியரை இளைஞர்கள் காதலிக்க,
கடிதாசை எதிர்பார்த்து கன்னியர்கள் நின்ற நாட்கள்,
புதுக் கொலுசைக் காண்பிக்க குளத்தில் அவள் கால் நனைக்க,
கொலுசோடு பாதத்தை காதலர்கள் இரசித்த நாட்கள்.
பஞ்சுமிட்டாய் வாங்கியவள் பாங்குடனே சுவைத்து நிற்க,
பஞ்சுமிட்டாய் ஆக தன்னை அவன் நினைத்து கிறங்கி நிற்க,
அவன் நினைப்பை உணர்ந்த அவள் நாணத்தில் நனைந்த நாட்கள்.
மீண்டும் ஒரு தீபாவளி கொண்டுதந்த நினைவலைகள்,
தீப ஒளி போன்று நெஞ்சின் இருளகற்றி மகிழ்விக்க,
பட்டாசை ஒதுக்கிவிட்டு மத்தாப்பை அவன் எடுத்தான்,
மத்தாப்பின் ஒளியினிலே அவள் சிரிப்பைப் பார்த்து நின்றான்.
சுலீ. அனில் குமார்.