நலமாக இருக்கிறீர்களா தாயே?
நலம் விசாரித்து நின்றேன் தென்குமரித் தாயாம்
என் குமரித்தாயிடம்.
'என்னவென்று சொல்வதப்பா நான் படும் பாட்டை'
காத்திருந்ததுபோல் புலம்பவே துவங்கினாள்.
என்றும் குமரி என்று இறுமாந்து இருந்தேன்,
இளமையின் வனப்புடன் அழகியாய்ச் சிலிர்த்தேன்,
மலைகளும் குன்றுகளும் அழகைக் கூட்ட,
குளங்களும், வயல்களும் செழிப்பைக்காட்ட,
பேரழகி நானெனப் பெருமையில் திளைத்தேன்.
யார் கண் பட்டதோ தெரியவில்லை எனக்கு,
'நானும் கூட பாதிக்கப் பட்டேன்'.
அழகாய் இருந்தால் இரசிப்பது சகஜம்
ஓரக்கண்ணாலதைப் பார்ப்பதும் இன்பம்.
ஆனால் அந்தோ!
ருசித்துப் பார்க்க நினைக்கின்றார்களே.
மலைகளை உடைத்து கல்லெடுத்தார்கள்,
கனிமங்களை எல்லாம் களவாடினார்கள்,
குளங்களில் எல்லாம் வீடுகட்டினார்கள்,
மலையடிவாரத்தில் கல்லூரிகள் முளைத்தது,
கல்வியென்ற வியாபாரம் களைகட்டித் தழைத்தது.
என் இளமையை அழித்து கட்டிடங்கள் வந்தன,
என் இதயத்தைத் துளைத்து சாலைகள் வந்தன.
'நானும் கூட பாதிக்கப்பட்டேன்,
நான்கு வழிச்சாலைக்காய் பாதிக்கப் பட்டேன்'
என்று கதறத்தான் நினைக்கிறேன்,
கலங்கித்தான் நிற்கிறேன்.
கவலையில் பாதியை நான் சுமந்து கொண்டேன்,
கனத்தமனத்துடன் இரயிலேறி வந்தேன்.
சுலீ. அனில் குமார்