சூறையாடிய சூறாவளியைக் குறை கூற நான் விரும்பவில்லை,
சுழற்றி அடித்த சுழலிக் காற்றைப் பழிசொல்லும் எண்ணமில்லை,
இயற்கை தன் வேலையை இயல்பாகச் செய்கிறது,
இயலாமையை மறைப்பதற்கு இயற்கை மீது பழி எதற்கு?
மனிதர்களின் இழப்புகளை மணிக்கணக்காய்ச் சொல்கிறீர்கள்,
மனிதர் படும் கஷ்டங்களை வகைவகையாய்ச் சொல்கிறீர்கள்,
இழப்புதரும் வேதனையை மறப்பது சுலபமில்லை,
மறுத்துச் சொல்ல நான் இரக்கமற்ற உயிருமில்லை.
வருமானம் போய்விட்டதே என்று வருத்தமோடு இருக்கிறீர்கள்,
இனியெப்படி வாழ்வோம் என்று கலங்கித்தான் நிற்கிறீர்கள்,
நான் தந்த பலன் எல்லாம் நின்றுவிட்டது என்கிறீர்கள்,
நானே இல்லை என்றுச் சொல்லமறந்து விட்டீர்களே!
இழப்பீடு சிலபெற்று, புதிய பல மரம் வைத்து, சில வருடம் போராடி இயல்பு வாழ்க்கை வாழ்வீர்கள்.
என்னுள் இருந்த எல்லாமும் அள்ளி அளித் தந்த நானோ
என்னுயிரைத் தொலைத்து நிற்கும் உண்மையதை மறந்தீர்கள்.
நானும் ஓர் உயிர் என்று....
நானும் ஓர் உயிர் என்று
நினைக்கக் கூட மறந்தீர்கள்,
நியாயமா? இது நியாயமா?
எண்ணியாவது பாருங்கள்.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*