Header Ads Widget

Responsive Advertisement

கஜா



மழை வேண்டி நின்றவரை மனம் கலங்கவைத்ததோடு
மதம் பிடித்த யானை போல் சேதத்தைக் கொடுத்துவிட்டு
வளம் நிறைந்த டெல்ட்டாவை நிலைகுலைய வைத்துவிட்டு
வந்த வேலைமுடிந்ததென்று ஓய்வெடுக்கச் சென்றுவிட்டாய்.

ஓய்வெடுத்து முடிந்த உடன் கோபமது தணிந்ததென்றால்
சற்றே நீ எட்டிப்பார்
நீ செய்த நாசத்தை,
சரிதானா? எண்ணிப்பார்
நீ செய்த துரோகத்தை,
முடித்து விட்டாயா
நீ வந்த நோக்கத்தை.

பிள்ளையை இழந்துவிட்டுக் கதறி நிற்கும் தாயைப்பார்,
தாலியை அறுத்துவிட்டுத் தவித்து நிற்கும் பெண்ணைப் பார்,
வளத்தையெல்லாம் தொலைத்துவிட்டுப் பதறி நிற்கும் மண்ணைப்பார்,
செய்தது சரிதானா
செய்தது சரிதானா? சிறிதேனும் எண்ணிப்பார்.

உயிர் காத்த பயிர்களெல்லாம் உயிரிழந்து நிற்பதைப் பார்,
அதைக்கண்ட விவசாயி தற்கொலை செய்ததைப்பார்,
கடன்பட்ட ஏழைகளின் கண்ணீரை எண்ணிப்பார்,
உடன்பாடா உனக்கு எல்லாம்?
உடன்பாடா உனக்கு எல்லாம்?
ஒரு நிமிடம் நினைத்துப்பார்.

அழித்துவிட்டதையெல்லாம் ஆக்கமுடியுமா உன்னால்?
எடுத்துச் சென்றதையெல்லாம் கொடுக்கமுடியுமா உன்னால்?
முடியாது என்று சொன்னால் உனக்கேது அதிகாரம்?
மொத்தமாக எம் வளத்தை அழித்துவிட அதிகாரம்?

ஒருபோதும் எம்மண்ணில் இனி  கால்வைக்க நினைக்காதே,
கட்டவிழ்த்து விட்டயானைச் செயலை நீ செய்யாதே,
கெட்டகுடியைக் கெடவைக்கும் நினைப்போடு வாராதே,
நண்பனாக அன்றி
நண்பனாக அன்றி இனி
எம்மண்ணில் நுழையாதே.

*சுலீ அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி