பொருள் வாங்கப் பல்பொருள் அங்காடி சென்றேன்,
பொருட்களை ஒவ்வொன்றாய் தேர்வுசெய்து கொண்டேன்,
வீடு சுத்தம்செய்யும் பொருள் பக்கம் சென்றேன்,
பொருட்களைப் பார்த்த நான் அதிர்ச்சியில் நின்றேன்.
பிரபலமான பொருளதனின் நிறத்திலும் வடிவிலும் ஆங்கிலப் பெயரோடு வகை வகையாய்ப் போலிகள்.
பொருட்களில் மட்டுமா போலிகள் இங்கு?
மனிதரில் கூடத்தான் எத்தனை போலிகள்.
பாலியல் வன்முறை என்றால் கூட மதத்தைப் பார்த்து தான் கருத்தைச் சொல்கிறார்.
'நானும் கூட பாதிக்கப் பட்டேன்' என்றே கத்திக் கதறினால் கூட
பாதிக்கப்பட்டவர் சாதியைப் பார்க்கிறார்
பாதிப்பைக் கொடுத்தவர் இனத்தைப் பார்க்கிறார்,
சாதிமதம் பார்த்துத்தான் வீதியில் முழங்குகிறார்.
அரசியல்வாதிதான் அப்படியென்றால்
சாதாரண மக்களும் விதிவிலக்கா என்ன?
'பிறர் மனம் புண்படும்' நினைக்கிறார் மனத்தில், வெளிப்படையாய்ச் சொல்லாமல் மறைக்கிறார் நிஜத்தில்,
போலியாய்ச் சிரித்து மகிழ்ச்சியாய் நடிக்கிறார்,
மகிழ்ச்சியைக் காட்டவே போலியாக இருக்கிறார்.
வாழ்விலே மட்டும் தான் போலித்தனங்களா, இல்லை
வாழ்க்கையே இங்கு போலியாகிப் போனதா?
புரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன் நானும்.
சுலீ. அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.
