Header Ads Widget

Responsive Advertisement

ஒருவனும் ஒருத்தியும்


விழிகள் கலந்திட  காதல் பிறந்திட
......விரும்பிய இருவரின் திருமண மாயினும்

விழைந்தே வந்து பெண்ணினைப் பார்த்து
......விருப்பங் கேட்டு உறுதி செய்து

செழுங்கிளைச் சுற்றம் கூடிட இனிதாய்ச்
......சிறப்புடன் நடக்கும் திருமண மாயினும்

மழையும் செந்நிற மண்ணுமாய் இருமனம்
......மகிழ்வுடன் கலந்து ஒன்றிட வேண்டும்!
(1)

பெண்ணை மணந்தவன் கணவ னாகிறான்!
....பெண்ணோ அவனின் மனைவி ஆகிறாள்.

எண்ணம் ஒன்றாய்க் கலந்தால் தானே
....என்றும் இன்பம் கூடிடு மங்கே!

கண்ணைக் காக்கும் இமையாய் அவளை
.......கணவன் காக்க வேண்டும் அன்பாய்!

மண்ணின் பொறுமை கொண்டே அவளும்
........மகிழ்வாய் அவனுடன் வாழ்ந்திட வேண்டும்!
(2)

உன்னில் நானும் என்னில் நீயும்
....உயிராய்க் கலந்தே வாழ்வோம் அன்பே!

என்றே ஒவ்வொரு கணவனும் மனைவியும்
......என்றும் பிணைந்தே வாழ்ந்திடல் நன்றாம்!

புன்னகை மாறா முகமுடன் இருவரும்
......பொறுமை கொண்டே வாழ்ந்திட வேண்டும்!

உன்னத அன்பு பெருகிட வேண்டும்!
......உடலின் இளமை வற்றிய பின்னும்!
(3)

சுடுநீர்ப் போல கணவ னிருந்தால்
......சில்லென மனைவி இருந்திட வேண்டும்!

கொடுமொழி  சினந்தே கணவன் கூறினால்
......கிளர்ந்தே மறுமொழி மனைவியும் சொல்ல

விடுபடும் நெருக்கம் இருவரின் இடையே!
.......விட்டுக் கொடுத்து வாழ்பவர் வாழ்வோ

கெடுத லின்றி தென்றலாய்ப் போகும்!
......குடும்பந் தன்னில் இன்பம் பொங்கும்!
(4)

த.ஏமாவதி
கோளூர்