கையேந்தி வாழாமல் கைத்தொழிலின் துணைகொண்டு
மெய்வருத்தி உழைக்கின்ற உழைப்பு தந்த சிரிப்பா?
பொய்யான மனிதர்களின் பொய்மொழியில் மயங்காமல்
மெய்யாக நீ நடக்கும் நேர்மை தந்த களிப்பா?
முத்தான பிள்ளைகள் தப்பாது வளர்ந்து விட்டால்
சத்தான வாழ்வு வரும் நம்பிக்கை மகிழ்வா?
காத்திருந்து பார்த்திருந்த கைப்பிடித்த கணவனை நீ
பத்து நாள் கடந்தபின்னே கண்டுவிட்ட நெகிழ்வா?
அத்தனை மகிழ்ச்சியையும் முத்துப்பல் வெளித்தெரிய
இத்தனை அழகாக வெளிப்படுத்தி விட்டாயே!
கண்ணுபடப் போகுதம்மா புண்ணிய வதியே உனக்கு
'சுத்திப்போடு நீ உடனே' இது மூத்தோர் வாக்கு.
*கிராத்தூரான்