வாழவே பிறந்தோம் வாகாய் நாமே!
..........வாழும் விதங்கள் அறிவோம் வாரீர்!
வாழ்வில் ஒருவிதம் சுயநல வாழ்வு!
.........வாயிற் கதவை
அடைத்தே வாழ்தல்!
பாழும் பணத்தைப் பூட்டி வைத்து
.........பாரில் யார்க்கும் உதவா வாழ்க்கை!
வீழ்ந்த போதில் உதவிய பேர்க்கு
........வாழும் போது உதவுதல் மறுவகை!
(1)
உதவிடும் பேர்க்கே உதவுதல் என்பது
.........உணர்ந்திடு அதுதான்வாணிப வாழ்க்கை!
இதயமில்லா மாந்தன் வாழ்வோ எட்டி!
........எட்டிம ரம்கனிந் தாலும் பயனென்?
பதறியே வறியோர்க் குதவி வாழ்தல்
.........பிறர்நலம் விரும்பும் மாந்தரின் வாழ்க்கை!
உதவியால் பிறரின் இன்னல் தீர்த்தல்
........உலகில் அதுதான் உன்னத வாழ்க்கை!
(2)
தன்னை இழந்து பிறர்க்காய் உதவும்
.......தியாக வாழ்வை வாழை உணர்த்தும்!
தனக்காய் மட்டுமே வாழ்தல் வேண்டா!
........தணிவாய்ப் பிறர்க்காய் வாழ்வதே வாழ்க்கை!
தனியொரு மாந்தன் தனித்து நின்றிட
........துணையாய் இன்றி ஏணியாய் நின்றிடு!
தனது சொந்த காலில் அவன் நின்றிட
.........தெம்பினை ஊட்டி வழிதனைக் காட்டு!
(3)
மீனைத் தராதே வலையினை வீசி
...........மீனினைப் பிடிக்கும் தொழிலைச் சொல்லிடு!
தேனைத் தராதே! தேனீ வளர்த்து
..........தானே தேனைப் பெற்று வாழவை!
உன்னால் வாழ்ந்தேன் என்றே அவனை
.......உன்செயல் சொல்ல வைப்பதே வாழ்க்கை!
என்றும் எவர்க்கும் ஏணியாய் இருப்போம்!
..........எவர்க்கும் வாழ்வில் ஒளியாய் இருப்போம்!
த.ஹேமாவதி
கோளூர்