Header Ads Widget

Responsive Advertisement

அளவுக்கு மிஞ்சினால் - அனில் குமார்



என் பெற்றோர் கொடுக்காத பாசம்
பிள்ளைக்குக் கொடுத்திட வேண்டும்,
எனக்கன்று  கிடைக்காத வசதி பிள்ளைக்குக் கிடைத்திட வேண்டும்,
நான் அன்று காணாத உலகம் 
என் பிள்ளை கண்டு மகிழ வேண்டும்
நினைக்கின்றார் பெற்றோர்கள், அளிக்கின்றார் அனைத்தையும்
அனைத்துமே கிடைத்ததும் நினைக்கின்றார் பிள்ளைகள்
'நாம் என்ன செய்தாலும் சரியே'.

அதை நீ செய்யாதே, இதை நீ செய்யாதே,
அங்கே நீ போகாதே, இங்கே நீ போகாதே,
ஏன் இத்தனை நேரம்? எங்குதான் சென்றாய்?
சந்தேகம் முளைக்கும், கேள்விகள் துளைக்கும்,   
அனைத்திற்கும் கேள்விகள், அணுப் பொழுதும் கேள்விகள்
கண்டிப்போ தளர்த்திட, இளமனம் மரத்திட 
வெறுத்துப் போய் பிள்ளைகள் நினைத்தபடி நிற்பார்
'நாம் என்ன செய்தோம் தவறு?,

தொலைக்காட்சி ஒருபுறம், கணினியோ மறுபுறம்
இரண்டுமே ஒன்றாகி அலைபேசி என்றாகி
அல்லும் பகலும் வாழ்க்கையே அதுவாகி 
நிமிர்ந்து பார்க்கும் வழக்கமில்லை
நிறை குறைகள் உணர்விலில்லை
கண்டு நிற்போர் பொறுப்பதில்லை 
கண்டிக்கும் உரிமையில்லை
என்றாலும் நினைப்பார்கள் தனக்குள்ளே கேட்பார்கள்
'ஏனிப்படி ஆனார்கள் இவர்கள்?'

அதீத கோபம், அளவற்ற ஆசை
கட்டுப்பாடு என்பதே இல்லாத உணவு
பாசம், பரிவு, ஈவு, இரக்கம்
தூக்கம், ஏக்கம், பிறர் செயல் தாக்கம்
புகழ்ச்சி, இகழ்ச்சி, மகிழ்ச்சி, மிரட்சி
இடைவிடாப் பேச்சு, இடைநில்லா மூச்சு
அளவுக்கு மிஞ்சினால் அனைத்துமே நஞ்சு
அளவோடு இருந்திடில் குளிர்ந்திடும் நெஞ்சு
அளவோடு இருந்திட மகிழ்ந்திடும் நெஞ்சு.

*கிராத்தூரான்*