Header Ads Widget

Responsive Advertisement

இன்னும் முற்றுப் பெறவில்லை



ஒரு வேளை உணவின்றி,
பசியன்றி உணர்வின்றி,
வளம் குன்றி, நலம் குன்றி
வறுமையன்றி வேறின்றி
இருந்தது ஒரு காலம்.

உடுப்பதற்கு உடையின்றி
படுப்பதற்கு இடமின்றி
கொடுப்பதற்கு யாருமின்றி
எடுப்பதற்கும் எதுவுமின்றி
இருந்தது ஒரு காலம்

வார்த்தையில் வலுவின்றி
குரலுயர்த்தும் சக்தியின்றி
சொல்லுகின்ற திராணியின்றி
கேட்பதற்கு நாதியின்றி
இருந்தது ஒரு காலம்.

வெளியில் வர உரிமையின்றி
அடுப்படியின் துணையன்றி
புலம்பக் கூட ஆளின்றி
கண்ணீரின் குறையின்றி
இருந்தது ஒரு காலம்.

காலம் அது மாறினாலும்
பலர் நிலையில் உயர்ந்தாலும்
அடக்கியவன் சென்றாலும்
சுதந்திரத்தைப் பெற்றாலும்
முற்றுப் பெறவில்லையின்னும்
முழுதுமாகத் தேவை.

வெளியுலகில் வந்தாலும்
கல்வியிலே சிறந்தாலும்
கேள்வி கேட்கத் துணிந்தாலும்
குறை உணர்த்த முடிந்தாலும்
முற்றுப் பெறவில்லை இன்னும்
சுதந்திரத்தின் தேவை.

முற்றுமாகக் குறை களைந்த
சுதந்திரத்தின் தேவை.

    *'கிராத்தூரான்'*
*சுலீ. அனில் குமார்.*